சுருளிமலை அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்த பக்தர்கள்


சுருளிமலை அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்த பக்தர்கள்
x
தினத்தந்தி 17 Oct 2021 9:57 PM IST (Updated: 17 Oct 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

சுருளிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் நெய் அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்

கம்பம்: 

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பிறப்பையொட்டி நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. வருகிற 21-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கேரளாவில் கனமழை பெய்து வருவதால் சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மேலும் கேரளாவில் 19-ந்தேதி வரை கனமழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக 19-ந்தேதி வரை சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் செல்ல, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தடை விதித்துள்ளார். 

இதனால் கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு வாகனங்களில் சென்ற பக்தர்கள் குமுளி வரை சென்று நேற்று திரும்பினர். இதையடுத்து அவர்கள், கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு வந்தனர். பின்னர் அங்குள்ள சுருளி ஆற்றில் நீராடி சுருளிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் நெய் அபிஷேகம் செய்து வழிபட்டனர். 

இதுகுறித்து பக்தர்களிடம் கேட்டபோது, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முடியாததால் இருமுடி கட்டி வந்த நெய் அபிேஷகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்ய வேண்டும் என்று கம்பம் பகுதியில் உள்ள அய்யப்ப பக்தர்களிடம் கேட்டோம். அவர்கள் சுருளி மலையில் அய்யப்பன் கோவில் இருப்பதாக கூறினர். இதையடுத்து அங்கு சென்று அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபட்டு ஊருக்கு திரும்புகிறோம் என்றனர்.  

Next Story