சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
தொடர் கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உத்தமபாளையம்:
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
ஹைவேவிஸ் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஹைவேவிஸ், மணலாறு, தூவானம் உள்ளிட்ட அணைகளும் நிரம்பி மறுகால் பாய்கிறது.
இதேபோல் சுருளி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவி பகுதிக்கு யாரும் சென்று விடாமல் இருக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது கனமழை காரணமாக முல்லைப்பெரியாற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றுப் பகுதியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜுனன், துணை தாசில்தார் முருகன் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆற்றங் கரையோரம் வசித்து வருபவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தங்களுக்கான கிராமங்களில் தங்கி இருக்க வேண்டும். மழைச் சேதம் குறித்தும், தடுப்பு நடவடிக்கை குறித்தும் விரைவாக தகவல் அனுப்ப வேண்டும் என்று உத்தமபாளையம் தாசில்தார் அறிவுறுத்தி உள்ளார்.
ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை
இதேபோல் இந்த கனமழை காரணமாக வைரவன் வாய்க்கால், குருவனூற்று ஆற்றுப் பாலம், காஞ்சிமரத்துறை பாலம் ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதிகளில் குளிக்கவும், துணி துவைக்கவும் கூடாது என்று போலீசார் தடை விதித்துள்ளனர்.
மேலும் ஒலிப்பெருக்கி மூலம் கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் போலீசார் கூடலூர் பகுதியில் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆபத்து ஏற்படும் சூழ்நிலை தெரிந்தால் உடனே போலீஸ் நிலையத்திற்கோ அல்லது நகராட்சி அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கவேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story