புவனகிரி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி மனைவி வளைகாப்பு நாளில் பரிதாபம்


புவனகிரி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி மனைவி வளைகாப்பு நாளில் பரிதாபம்
x
தினத்தந்தி 17 Oct 2021 11:05 PM IST (Updated: 17 Oct 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

புவனகிரி அருகே மனைவி வளைகாப்பு நாளில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.

 புவனகிரி, அ

மனைவிக்கு வளைகாப்பு 

புவனகிரி அருகே உள்ள உடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜம்புலிங்கம் மகன் தமிழரசன்(வயது 28). இவருக்கும், பிரியா என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 7 மாத கர்ப்பிணியாக இருந்த பிரியாவுக்கு நேற்று மதியம் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 
இதற்கிடையில் மதியம் தானே வளைகாப்பு, அதிகாலையிலேயே வேலைக்கு சென்று வந்து விடலாம் என்று தமிழரசன் நினைத்தார். அதன்படி நேற்று அதிகாலை 5 மணியளவில் தமிழரசன் விவசாய வேலைக்கு சென்றார். அவர் வளர்த்து வந்த நாயும், அவருடன் சென்றது. 

மின்சாரம் தாக்கி பலி 

அப்போது ஒரு வயல் ஓரத்தில் மின் கம்பி அறுந்து கிடந்தது. இதை கவனிக்காமல்  ெசன்ற தமிழரசன், அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கியதில் தமிழரசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் சென்றிருந்த நாயும், மின்சாரம் தாக்கி இறந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பிரியா மற்றும் உறவினர்கள் அங்கு வந்து கதறி அழுதது காண்போரின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்தது. 

சோகத்தில் மூழ்கிய கிராமம் 

இது பற்றி தகவல் அறிந்ததும் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தமிழரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இது குறித்து பிரியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவிக்கு மதியம் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த இருந்த நிலையில் மின்சாரம் தாக்கி கணவர் இறந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. 

Next Story