மாவட்டத்தில் தொன்மை மாறாமல் புதுப்பிப்பு: பழமையான கட்டிடங்களில் இயங்கும்அரசு அலுவலகங்கள் ரூ.7 கோடியில் புனரமைப்பு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பணிகள் தொடங்கியது


மாவட்டத்தில் தொன்மை மாறாமல் புதுப்பிப்பு: பழமையான கட்டிடங்களில் இயங்கும்அரசு அலுவலகங்கள் ரூ.7 கோடியில் புனரமைப்பு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பணிகள் தொடங்கியது
x
தினத்தந்தி 17 Oct 2021 5:37 PM GMT (Updated: 17 Oct 2021 5:37 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் பழமையான கட்டிடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்கள் ரூ.7 கோடியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் பணிகள் தொடங்கியது.

புதுக்கோட்டை:
கலெக்டர் அலுவலகம்
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் மன்னரின் அரண்மனையில் இயங்கி வருகிறது. இந்த அரண்மனை கட்டிடம் கடந்த 1913-ம் ஆண்டு ராஜா சர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூரால் கட்ட தொடங்கப்பட்டு, கடந்த 1929-ம் ஆண்டில் முடிவுற்று ராஜகோபால தொண்டைமான் பகதூரால் திறக்கப்பட்டது. தரை தளம் மற்றும் 3 தளங்களுடன் அமைந்த இந்த அரண்மனை கட்டிடம் அந்த காலத்தில் கிரானைட் கற்களாலும், கருங்கற்களாலும், தேக்கு மரத்தாலும் கட்டப்பட்டது. 
இந்த நிலையில் அரசு அலுவலகங்கள் இயங்கி வரும் பழமையான கட்டிடங்களை பாதுகாத்திடும் வகையில் அதனை பராமரித்து, சீரமைத்து புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கட்டிடம் புனரமைப்பு மேற்கொள்ள பணிகள் தொடங்கி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- பழமையான கட்டிடங்களை அதன் தொன்மை மாறாமல் புதுப்பித்து பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 29 கட்டிடங்களுக்கு ரூ.80 கோடி அரசு நிதி ஒதுக்கி உள்ளது. பொதுப்பணித்துறையில் `ஹெரிடேஜ்' என்ற பிரிவினர் இந்த பணியை மேற்கொள்கின்றனர்.
ரூ.6 கோடியே 99 லட்சம் நிதி ஒதுக்கீடு
புதுக்கோட்டை மாவட்டத்தில் பழமையான கட்டிடங்களில் இயங்கி வரும் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம், கலெக்டர் முகாம் அலுவலகம், கீரனூர், ஆலங்குடி, திருமயம் ஆகிய இடங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களும் புனரமைப்பு பணி மேற்கொள்ள ரூ.6 கோடியே 99 லட்சம் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
இதில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு ரூ.1 கோடியே 23 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த அரண்மனை கட்டிடத்தில் புதிய தொழில்நுட்பங்கள் எதுவும் பயன்படுத்தாமல் தொன்மை மாறாமல் பழமையான முறையிலேயே புனரமைப்பு செய்யப்படும். சுவர்களில் உள்ள செடிகள் அகற்றப்படும். கருங்கற்களில் பாலீஸ் செய்து, சேதமடைந்த பகுதிகளில் சுண்ணாம்பு, கடுக்காய் போன்றவை பயன்படுத்தி பூச்சு பணி மேற்கொள்ளப்படும். மேலும் உத்தரங்கள், கதவுகள் சேதமடைந்திருந்தால் அதற்குபதிலாக தேக்கு மரத்திலான கதவுகள், உத்தரங்கள் பொருத்தப்படும்.
பணிகள் தொடங்கின
கட்டிடத்தில் வெள்ளை வர்ணம் பூச்சு அடிக்கப்படும். இந்த பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் மூலம் இந்த கட்டிடம் மேலும் வலுப்பெறும். இவ்வாறு கூறினர்.
இந்த நிலையில் புனரமைப்பு பணிகள் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின் கலெக்டர் அலுவலகம் புதுப்பொலிவு பெறும். இதேபோல கீரனூர், ஆலங்குடி, திருமயம் ஆகிய தாலுகா அலுவலகங்களும் புதுப்பொலிவடையும்.

Next Story