தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை காரணமாக தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடல் அழகை பார்க்க நடைமேடை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.
ராமேசுவரம்,
தொடர் விடுமுறை காரணமாக தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடல் அழகை பார்க்க நடைமேடை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.
தொடர் விடுமுறை
தமிழகம் முழுவதும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு கடந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. தொடர் விடுமுறையை தொடர்ந்து ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. 4-வது நாளாக நேற்றும் ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இவ்வாறு வந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு பின்னர் கோவிலில் உள்ள சாமியை மற்றும் அம்பாளை தரிசனம் செய்ய பிரகாரத்தில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து சென்றனர்.
இதேபோல் தனுஷ்கோடி பகுதியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது. குறிப்பாக கடைக்கோடி பகுதியான அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது.
நடை மேடை
கடல் சீற்றம் அதிகமாக இருப்பது தெரிந்தும் அரிச்சல்முனை சாலை வளைவை தாண்டி சாலையின் பாதுகாப்பிற்காக போடப்பட்டுள்ள தடுப்புசுவர் கற்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள், பெண்கள், குழந்தைகளுடன் நின்று ஆபத்தை அறியாமல் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தனுஷ்கோடிஅரிச்சல் முனைப்பகுதியில் சாலை வளைவை தாண்டி ஆபத்தான முறையில் தடுப்புச் சுவர்களில் நின்று போட்டோ எடுக்கும் நிலை தொடர்கின்றது. இதன் மூலம் அரிச்சல் முனை பகுதியில் கற்கள் சரிந்து சுற்றுலாப் பயணிகள் கடலில் விழுந்து அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.
ஆகவே சாலை வளைவை தாண்டி சுற்றுலாப் பயணிகள் செல்வதை தடுக்கும் வகையில் தடுப்பு கம்பிகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைப்பதற்கோ அல்லது அரிச்சல்முனை சாலை வளைவில் சுற்றி சுற்றுலாப் பயணிகள் நின்று கடல் அழகை வேடிக்கை பார்க்க வசதியாக உறுதியான நடை மேடை அமைக்கவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story