தென்காசி சிற்றாற்றில் இழுத்துச் செல்லப்பட்டவர் உயிருடன் மீட்பு


தென்காசி சிற்றாற்றில் இழுத்துச் செல்லப்பட்டவர் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 17 Oct 2021 8:55 PM (Updated: 17 Oct 2021 8:55 PM)
t-max-icont-min-icon

தென்காசி சிற்றாற்றில் இழுத்துச் செல்லப்பட்டவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

தென்காசி:
தென்காசி சுவாமி சன்னதி தெருவைச் சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன் (வயது 42). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை 2 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதற்காக தர்ப்பணம் கொடுப்பதற்கு தென்காசி யானைப்பாலம் பகுதியில் உள்ள சிற்றாற்று கரைக்கு வந்தார். பின்னர் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினார்.
நேற்று முன்தினம் தென்காசி பகுதியில் பெய்த பலத்த மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்று வெள்ளம் வெங்கடசுப்பிரமணியனை இழுத்துச்சென்றது. தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட அவர் சிறிது தூரத்தில் இருந்த மரத்தின் கிளையை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தார்.
இதை பார்த்ததும் அவருடன் சென்றிருந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் ரமேஷ், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். வெங்கடசுப்பிரமணியனை மீட்கும் பணிகளை தொடங்கினர். தீயணைப்பு படையினர் கயிறு கட்டி ஆற்றில் நீந்திச் சென்று வெங்கடசுப்பிரமணியனை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை யானை பாலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story