தினத்தந்திபுகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
எரியாத மின்விளக்கு
தர்மபுரி நகரில் இருந்து ஒட்டப்பட்டி வரை தர்மபுரி-சேலம் சாலையின் தடுப்பு சுவர் பகுதியில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி முதல் ஒட்டப்பட்டி வரை உள்ள பகுதியில் மின் விளக்குகள் அடிக்கடி எரிவதில்லை. இதனால் இரவில் போதிய வெளிச்சம் இன்றி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே மேற்கண்ட பகுதி சாலையில் மின் விளக்குகள் முழுமையாக எரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
-ராஜன், தர்மபுரி.
உழவர் சந்தை
தமிழக அரசு வேளாண்மை துறை சார்பில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி புதியதாக உழவர் சந்தை அமைத்து கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லட்சுமணன், நரசிங்கபுரம், சேலம்.
திறக்கப்படாத பொதுக்கழிப்பிடம்
சேலம் மாவட்டம் ஓமலூரில் காசி விஸ்வநாதர் கோவில் பின்புறம் பொதுக்கழிப்பிடம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பொதுக்கழிப்பிடம் சில காரணமாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. எனவே பொதுக்கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வருவார்களா?
-ஊர்மக்கள், ஓமலூர், சேலம்.
அறுந்து கிடக்கும் மின்கம்பி
சேலம் வீரபாண்டி ஒன்றியம் பைரோஜி ஊராட்சி 6-வது வார்டு வடக்கு காடு வாய்க்கால் கரையோரம் தென்னை மரம் விழுந்ததில், மின்கம்பி அறுந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒரு வார காலமாக மின்சாரம் வசதி இல்லை. மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அறுந்து கிடக்கும் மின்கம்பியை சரி செய்து மின்சாரம் வழங்க வேண்டும்.
-மணிகண்டன், பைரோஜி, சேலம்.
இருசக்கர வாகனங்களால் இடையூறு
நாமக்கல் கடைவீதியில் நகை மற்றும் ஜவுளிக்கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றிற்கு வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையின் இருபுறமும் நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், இருசக்கர வாகனங்களை குளக்கரை திடலில் நிறுத்தி விட்டு செல்ல போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில், நாமக்கல்.
குண்டும், குழியுமான சாலை
ஈரோடு-ஓமலூர் மெயின் ரோட்டில் தாரமங்கலம்-கொங்கணாபுரம் வரை சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது. குழியின் ஆழம் அதிகமானவுடன் மணல் போட்டு மூடுவதை போல தாரை போட்டு மூடி விடுகிறார்களே தவிர சாலையை சீரமைக்கவில்லை.. குழியை மூடுவதும் மீண்டும் பள்ளமாவதும் என்றே இருக்கிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கே.பரணிதரன், தாரமங்கலம்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி 8-வது வார்டு நேருநகர், வடக்கு உடையார்பாளையம் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு புதிய சாலை அமைப்பதற்காக ரோட்டில் பள்ளம் தோண்டப்பட்டது. அதன்பிறகு எந்த வேலையும் நடக்கவில்லை. இதுபற்றி பலமுறை நகராட்சியில் மனு கொடுத்தும் சாலைப்பணி சரிசெய்யப்படாமல் இருக்கிறது. எனவே ஜல்லிகள் பெயர்ந்து காணப்படும் இந்த சாலையை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைத்து தர வேண்டும்.
-ஊர்மக்கள், உடையார்பாளையம், சேலம்.
தெரு நாய்கள் தொல்லை
சேலம், ஜாகீர்ரெட்டிபட்டி, இண்டேன்நகர் பிரதான வீதி, ஆர்.ஜீ.அவென்யூ பகுதிகள், என்ஜினீயர் காலனி, டாக்டர்ஸ் காலனி ஆகிய பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. தெருவில் நடந்து செல்லும் குழந்தைகள், பெரியவர்கள், வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்க முற்படுவதால், அனைவரும் தெருவில் செல்லவே மிகவும் பயப்படுகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா?
-ஊர்மக்கள், ஜாகீர்ரெட்டிபட்டி, சேலம்.
ரகளையில் ஈடுபடும் மதுப்பிரியர்கள்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு இறையமங்கலம், காவிரி ஆற்றங்கரை போகும் வழியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடைக்கு அருகே, விநாயகர் கோவில் உள்ளது. மதுப்பிரியர்கள் கோவிலில் அமர்ந்து மது அருந்திகொண்டும், இறைச்சி சாப்பிட்டு கொண்டும் இருக்கிறார்கள். மேலும் மதுப்பிரியர்கள் போதையில் காவிரி ஆற்றுக்கு செல்பவர்களிடம் ரகளை செய்கிறார்கள். எனவே இங்கு மது அருந்துவதை தடுக்க மொளசி போலீசார் நடவடிக்கை எடுத்தால் நல்லது.
-ஊர்பொதுமக்கள், இறையமங்கலம், நாமக்கல்.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
தர்மபுரி நகரின் மையப்பகுதியில் நகராட்சி மகளிர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் கிழக்குப்புற நுழைவுவாயில் பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் அருகே குப்பைகள் மற்றும் கழிவு பொருட்களை கொட்டி வருகிறார்கள். இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே குப்பைகள், கழிவுப்பொருட்களை கொட்டுவதை முழுமையாக தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சீனிவாசன், தர்மபுரி.
சேலம் நெத்திமேடு அருகே உள்ள கரியபெருமாள் கரடு தென்புறம் காந்திநகரில் குப்பைத்தொட்டி இல்லாததால் பொதுமக்கள் குப்பைகளை ரோட்டிலேயே கொட்டும் அவலம் நிலை ஏற்பட்டுள்ளது. இதை மாநகராட்சி ஊழியர்களும் சரிவர சுத்தம் செய்வதில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், மக்களுக்கு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு குப்பைகளை சுத்தம் செய்து குப்பைத்தொட்டி வைக்க வேண்டும்.
-குணா, சேலம்.
Related Tags :
Next Story