சேலம் அழகு நிலைய பெண் உரிமையாளர் கொலை: தனிப்படை போலீசார் வங்காளதேசம், மும்பை விரைந்தனர்
சேலத்தில் அழகு நிலைய பெண் உரிமையாளர் கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் வங்காளதேசம், மும்பை விரைந்தனர்.
சேலம்:
சேலத்தில் அழகு நிலைய பெண் உரிமையாளர் கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் வங்காளதேசம், மும்பை விரைந்தனர்.
அழகு நிலையம்
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பெண் தேஜ்மண்டல் (வயது 27). இவர் சேலம் பள்ளப்பட்டி, சங்கர் நகர் ஆகிய பகுதிகளில் அழகு நிலையம் நடத்தி வந்தார். மேலும் முகமதுசதான் என்பவரை தனது கணவர் என்று கூறி சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 2 வீடு வாடகைக்கு எடுத்து, அதில் ஒரு வீட்டில் இவரும், மற்றொரு வீட்டில் அழகு நிலையத்தில் வேலை பார்த்த ஒரு ஆண், 3 பெண்களும் தங்கி இருந்தனர்.
இந்தநிலையில் கடந்த 15-ந் தேதி தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்டு அவரது உடல் ஒரு சூட்கேசில் வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அஸ்தம்பட்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவின் பேரில் உதவி கமிஷனர்கள் ஆல்பர்ட், நாகராஜன், இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரி, ராமகிருஷ்ணன், கணசேன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் பல்வேறு இடங்களில் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமறைவு
முதல் கட்ட விசாரணையில் கொலையான தேஜ்மண்டலுடன் இருந்தவர்களே அவரை கொலை செய்து விட்டு தலைமறைவாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கொலை நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் தேஜ்மண்டல் அழகு நிலையத்தில் வேலை பார்த்த 4 பேர், அவர் கொலை செய்யப்பட்ட வீட்டில் இருந்து வெளியில் வருவதும், பின்னர் அவர்கள் கதவை பூட்டுவதும், ஆண் ஒருவர் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை தள்ளிவிடுவதும் பதிவாகி இருந்தது. இதை பார்க்கும் போது அவர்கள் 4 பேர் தான் தேஜ்மண்டலை கொலை செய்து இருக்க வேண்டும்.
இதையடுத்து அவர்கள் குறித்து விசாரித்த போது அவர்கள் வங்காளதேசத்தை சேர்ந்த லப்லு, நிசி, மும்பையை சேர்ந்த ரிஷி, பெங்களூருவை சேர்ந்த ஷீலா என்பதும், கொலை நடந்த அன்று முதல் 4 பேரும் தலைமறைவாகி இருந்ததும் தெரிந்தது. இவர்கள் குறித்து விசாரித்த போது அவர்கள் பெங்களூரு தப்பி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
விரைவில் பிடிபடுவார்கள்
இதையடுத்து தேஜ்மண்டல் காதலரான ஆத்தூர் பகுதியை சேர்ந்த வாலிபரை அழைத்துக்கொண்டு பெங்களூருவில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது லப்லு, நிசி ஆகிய 2 பேர் வங்காளதேசத்திற்கும், ரிஷி மும்பைக்கும் சென்றதும், ஷீலா பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதும் தெரிந்தது. எனவே இவர்கள் 4 பேர் தான் கொலை செய்து இருக்க வேண்டும். இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பை மற்றும் வங்காளதேசம் விரைந்து உள்ளனர். தலைமறைவாக உள்ள ஷீலாவை பெங்களூருவில் தேடி வருகிறோம்.
தேஜ்மண்டல் அழகு நிலையம் என்ற பெயரில் மசாஜ் சென்டர் வைத்து அங்கு விபசார தொழிலும் நடத்தி உள்ளார். இதுகுறித்து ஏற்கனவே தேஜ்மண்டல் மீது பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே விபசார தொழில் போட்டியில் இந்த கொலை நடந்து இருக்கலாம். இருப்பினும் கொலையாளிகளை பிடித்தால் தான் உண்மையான காரணம் தெரிய வரும். கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story