சேலத்தில் 2 தடுப்பணைகள் நிரம்பின: ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி-200 ஏக்கர் பயிர்கள் சேதம்


சேலத்தில் 2 தடுப்பணைகள் நிரம்பின: ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி-200 ஏக்கர் பயிர்கள் சேதம்
x
தினத்தந்தி 18 Oct 2021 3:18 AM IST (Updated: 18 Oct 2021 3:18 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் 2 தடுப்பணைகள் நிரம்பி தண்ணீர் வெளியேறி ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும் 200 ஏக்கர் விவசாய பயிர்கள் சேதம் அடைந்தன.

சேலம்:
சேலத்தில் 2 தடுப்பணைகள் நிரம்பி தண்ணீர் வெளியேறி ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும் 200 ஏக்கர் விவசாய பயிர்கள் சேதம் அடைந்தன.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக சேலத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பின.
இந்தநிலையில் நேற்று மதியம் சேலத்தில் வெயில் அடித்தது. பின்னர் மாலை 4 மணி அளவில் மேக மூட்டம் காணப்பட்டது. தொடர்ந்து பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது. பின்னர் இரவில் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் சங்கர் நகர், பெரமனூர், அஸ்தம்பட்டி, அழகாபுரம் உள்ளிட்ட மாநகரில் ஏராளமான இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கிச்சிப்பாளையம், நாராயண நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
செங்கலணை நிரம்பியது
தொடர் மழையால் சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் உள்ள செங்கலணை நிரம்பியது. மேலும் அதிலிருந்து தண்ணீர் வெளியேறி சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து ஊருக்குள் நீர் புகுந்தது. விவசாய நிலங்களுக்குள் நீர் புகுந்ததால் பயிர்கள் நாசமாகின. இதே போன்று சேலம் சிவதாபுரத்தில் உள்ள ஏராளமான ஏக்கர் நெல் உள்ளிட்ட விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்து உள்ளனர். மேலும் குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
ஏற்காட்டில் பெய்த கனமழை காரணமாக அடிவாரம் பகுதியில் உள்ள கற்பகம் தடுப்பணை நிரம்பி அதில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால் சாலைகள் மழை நீரில் மூழ்கின. மேலும் தடுப்பணையை சுற்றியுள்ள 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி, பயிர்கள் சேதம் அடைந்தன. மேலும் ஏராளமான குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
மழை அளவு
நேற்று முன்தினம் மாவட்டத்தில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- 
மேட்டூர்-92.2., பெத்தநாயக்கன்பாளையம்-45, ஏற்காடு- 39.6, கெங்கவல்லி-25, சேலம்-24.7, ஆத்தூர்-22.4, ஆணைமடுவு-17, வீரகனூர்-7, ஓமலூர்-6, எடப்பாடி-4.6, காடையாம்பட்டி-3.3, கரியக்கோவில்-2.

Next Story