நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மதுபோதை: 8-வது மாடியில் இருந்து தவறி விழுந்து மருத்துவ கல்லூரி மாணவர் பலி


நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மதுபோதை: 8-வது மாடியில் இருந்து தவறி விழுந்து மருத்துவ கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 18 Oct 2021 3:43 AM IST (Updated: 18 Oct 2021 3:43 AM IST)
t-max-icont-min-icon

நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மதுபோதையில் இருந்த மருத்துவ கல்லூரி மாணவர், தனது அறை கதவு மூடி இருந்ததால் பின்பக்க குழாய் வழியாக சென்றபோது 8-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானார்.

பூந்தமல்லி, 

ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 21). இவர், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பி.டெக், பயோ மெடிக்கல் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், செம்பரம்பாக்கத்தில் உள்ள 18 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது மாடியில் தனது நண்பர்களுடன் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு பக்கத்து அறையில் தங்கி உள்ள நண்பர் ஒருவரின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.

பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்ததும் நவீன்குமார் தான் தங்கியுள்ள அறைக்கு செல்ல முயன்றார். ஆனால் அறையின் கதவு மூடப்பட்டு இருந்தது. அதன் சாவி மற்றொரு நண்பரிடம் இருந்தது. இதனால் பிறந்த நாள் கொண்டாடிய அறையின் பின்பக்கம் உள்ள குழாய் வழியாக சென்றால் தான் தங்கியுள்ள அறையின் பின் பக்கம் வழியாக உள்ளே சென்று விடலாம் என்று முடிவு செய்தார். ஏற்கனவே பலமுறை அதுபோல் சென்றதாகவும் ெதரிகிறது.

இதையடுத்து போதையில் இருந்த நவீன்குமார், பிறந்தநாள் கொண்டாடிய அறையின் பின்பக்கம் உள்ள குழாய் வழியாக தனது அறைக்கு செல்ல முயன்றார். அப்போது நிலைதடுமாறி 8-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த நவீன்குமார், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த நசரத்பேட்டை போலீசார், பலியான நவீன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story