கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்த இளைஞர்கள்
அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் கழிவுநீர் வாய்க்காலை இளைஞர்களே சுத்தம் செய்தனர்.
பாகூர், அக்.18-
அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் கழிவுநீர் வாய்க்காலை இளைஞர்களே சுத்தம் செய்தனர்.
தெரு எங்கும் குப்பைகள்
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிருமாம்பாக்கம் பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த பகுதியில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கடந்த சில நாட்களாக அகற்றப்படாததால் தெருவெங்கும் குப்பைமேடாக காட்சி அளிக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி, நோய் பரவும் அபாயம் உள்ளது.
இதேபோல் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், வாய்க்காலில் தேங்கியுள்ளது. இதனை முறையாக தூர்வாராததால் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. குறிப்பாக மழையின்போது கிருமாம்பாக்கம் - பிள்ளையார்குப்பம் சாலையோர சாக்கடை வாய்க்காலில் மழைநீர் கலந்து, கழிவுநீர் தெருவில் பெருக்கெடுத்து செல்கிறது.
அரசுக்கு கோரிக்கை
கிருமாம்பாக்கம்பேட் மாரியம்மன் கோவில் தெரு, பனங்காட்டு காலனி, தண்ணீர் தொட்டி வீதி, இந்திரா நகர் ஆகிய பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களும் பல ஆண்டுகளாக தூர்வாரப் படாததால் கழிவுநீர் தேங்கியுள்ளது.
இதை வெளியேற்றும் பிரச்சினையில் அக்கம்பக்கம் வீடுகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் அரசுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இளைஞர்கள் சுத்தம் செய்தனர்
இதனால் கிருமாம்பாக்கம் பேட் பகுதியை சேர்ந்த பாபா சாகிப் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் நேற்று நேரடியாக களத்தில் இறங்கினர். அவர்கள் கழிவுநீர் வாய்க்காலில் தேங்கியிருந்த குப்பை மற்றும் மண்ணை அகற்றி தூர்வாரினர். இதன்பின் சாக்கடை நீர் தடையின்றி வழிந்து சென்றது.
அரசை எதிர்பார்க்காமல் கழிவுநீர் வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்த இளைஞர்களை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story