சென்னையிலிருந்து 45 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பயணம்: திருவள்ளூர் போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு
சென்னையிலிருந்து சைக்கிள் பயணம் மூலம் சென்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபு திருவள்ளூர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர்,
தமிழக சட்டம்-ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி.யாக பணியாற்றி வரும் சைலேந்திரபாபு நேற்று காலை உடற்பயிற்சிக்காக சென்னையிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு பூந்தமல்லி, வெள்ளவேடு, மணவாளநகர் வழியாக திருவள்ளூருக்கு 45 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வருகை தந்தார்.
அப்போது திருவள்ளூரில் உள்ள தீயணைப்புத்துறை அலுவலகம் வந்த அவர், அங்கு பணியில் இருந்த தீயணைப்பு வீரர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அந்த சந்திப்பின் போது, 25 ஆண்டுகளாக தீயணைப்பு வீரர்களாக பணிபுரிந்தவர்களை சிறப்பு நிலைய அலுவலராக அரசு மூலம் பதவி உயர்வு பெற்றுத் தந்தமைக்கு திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் அவருக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
அதைத் தொடர்ந்து அவர், திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஆவணங்கள், ஆயுதங்கள் பாதுகாப்பு, சிறை அறை, போலீசாரின் பணிகள் குறித்த விவரம், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் போலீசாரின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் போலீசார் குடும்பத்துடன் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு சென்று குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் அங்கிருந்த குழந்தைகளை சந்தித்து கலந்துரையாடி அவர்களுக்கு நீங்களும் ஐ.பி.எஸ். ஆகலாம் என்ற தான் எழுதிய புத்தகத்ததை பரிசளித்தார்.
அதைத்தொடர்ந்து பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு சைக்கிளில் ஆய்வு செய்வதற்காக சென்றார். இந்த ஆய்வின் போது, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் யேசுதாஸ், மீனாட்சி, திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், தாலுகா இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story