தொடர் மழையால் வெள்ளம் பாலாற்றில் வரும் தண்ணீரை 85 ஏரிகளில் நிரப்பும் பணி தீவிரம்


தொடர் மழையால் வெள்ளம் பாலாற்றில் வரும் தண்ணீரை 85 ஏரிகளில் நிரப்பும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 18 Oct 2021 12:38 AM GMT (Updated: 18 Oct 2021 12:38 AM GMT)

தொடர் மழை காரணமாக பாலாற்றில் பெருக்கெடுத்து வரும் தண்ணீரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 85 ஏரிகளில் நிரப்ப பொதுப்பணித்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

வாலாஜாபாத்,

தமிழக, ஆந்திர எல்லை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஆந்திர மாநில அணைகளில் இருந்து மழை வெள்ளம் அதிக அளவில் திறந்து விடப்பட்டுள்ளது. இவ்வாறு திறந்து விடப்பட்டுள்ள வெள்ளம் வேலூர் மாவட்டம் வழியாக பாய்ந்து வாலாஜாபேட்டை பூண்டி அணைக்கட்டில் தேங்கிய நிலையில் பின்னர் அங்கிருந்து காஞ்சீபுரம் மாவட்டம் பாலாற்றில் பாய்கிறது.

காஞ்சீபுரம் மாவட்டம் பாலாற்றில் பாய்ந்துவரும் வெள்ளத்தை கடைமடை பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய் வழியாக திருப்பி காஞ்சீபுரம் தாலுகாவில் உள்ள மிக பெரிய ஏரியான தாமல் ஏரி மற்றும் மேல் பங்காரம், பெரிய கரும்பூர், கூரம், சிறுவாக்கம், பரந்தூர், காட்டுப்பட்டூர், பூதேரி, தண்டலம் உள்ளிட்ட 55 ஏரிகளிலும், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள மகாதேவி மங்கலம், சிங்கிலி பாடி, மதுரமங்கலம் உள்ளிட்ட 30 ஏரிகளிலும் என 85 ஏரிகளில் நிரப்ப தேவையான பணிகளை பொதுப்பணித்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வலது கரை கிராமங்களான சாத்தனஞ்சேரி, ஒரக்காட்பேட்டை, சிங்காரச்சேரி, மையூர், மாமண்டூர், பழபத்தூர், பழையஅந்தூர், படாளம், புளிப்பாக்கம், அரசர்கோவில், பள்ளிப்பட்டு, புதூர், ஈசூர், இரும்புலிச்சேரி, எடையாத்தூர், தண்டரை, புறஞ்சேரி, வேப்பஞ்சேரி, கடலூர், சின்ன குப்பம் மற்றும் இடது கரை கிராமங்களான மேலச்சேரி, பாலூர், தேவனூர், ஆத்தூர், திம்மாவரம், பழவேலி, மனப்பாக்கம், உதயம்பாக்கம், ஆனூர், எலுமிச்சம்பட்டு, வள்ளிபுரம், விளாகம், பாண்டூர், பாக்கம், நெரும்பூர், பணங்காட்டுங்சேரி, நல்லாத்தூர், ஆயப்பாக்கம், வாயலூர் ஆகிய 39 கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் பாலாற்றில் ஆற்றில் இறங்கவோ, ஆற்றை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம். செல்போன் மூலம் புகைப்படம் எடுப்பது, செல்பி எடுப்பது கூடாது. ஆடு, மாடு போன்றவற்றை பாலாற்றில் மேய்ச்சலுக்கு அனுப்பவேண்டாம். வீட்டில் உள்ள சிறுவர், சிறுமிகளை ஆற்றின் அருகில் செல்லாமல் இருக்க பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story