வாய்க்கால் கரையை உடைத்து தண்ணீர் திருட்டு
பல்லடம் அருகே பி.ஏ.பி. வாய்க்கால் கரையை உடைத்து தண்ணீர் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடம்
பல்லடம் அருகே பி.ஏ.பி. வாய்க்கால் கரையை உடைத்து தண்ணீர் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பி.ஏ.பி. வாய்க்கால்
பி.ஏ.பி. பாசன திட்டத்தில் பல்லடம், உடுமலை, பொள்ளாச்சி, காங்கேயம் உள்ளிட்ட தாலுகாக்களில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. திருமூர்த்தி மலையில் இருந்து பி.ஏ.பி., பிரதான வாய்க்கால் 124 கிலோ மீட்டர் செல்கிறது. பிரதான வாய்க்காலில் இருந்து ஆயிரக்கணக்கான கிளை வாய்க்கால்கள் செல்கின்றன. இந்த நிலையில், பல்லடம் பகுதியில் உள்ள பி.ஏ.பி. வாய்க்கால்களில், பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளுக்கு, பாசன தண்ணீர் வினியோகத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும், விவசாய பாசன சபை நிர்வாகிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பல்லடம் அருகே சேட பாளையம், வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்கு நடுவே செல்லும், பி.ஏ.பி. பாசன வாய்க்கால் கரையை மர்ம நபர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் உடைத்து தண்ணீர் திருடியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த, அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள், மணல் மூட்டைகள், மற்றும் கற்களை போட்டு அடைத்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
நடவடிக்கை
பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனை விவசாயிகள் பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு முறையும் தண்ணீர் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மோட்டார் வைத்து உறிஞ்சுவது, குழாய்கள் அமைத்து தண்ணீர் திருடுவது என நடந்து வந்த நிலையில் தற்போது வாய்க்காலை உடைத்து தண்ணீர் திருடும் அளவிற்கு சென்றுள்ளனர். 12ம் மற்றும் 13 ஆம் மடைக்கு இடையே செல்லும் பிரதான வாய்க்காலை உடைத்து தண்ணீர் திருடி உள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம். வாய்க்கால் உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story