தூத்துக்குடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 கொள்ளையர்கள் கைது 32 பவுன் நகைகள் மீட்பு
தூத்துக்குடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து 32 பவுன் நகைகளை மீட்டுள்ளனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 32 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று மாலை சிப்காட் போலீஸ் நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருட்டு
தூத்துக்குடி அருகே உள்ள சோரீஸ்புரம் நியூசுந்தரம் நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 51) என்பவர் வீட்டில் கடந்த 27.1.21 அன்று பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது. 11.2.2021 அன்று தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியை சேர்ந்த செல்வகணேஷ் மனைவி அம்சவள்ளி (36) என்பவரது வீட்டில் புகுந்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
கடந்த 8.8.2021 அன்று தூத்துக்குடி கே.டி.சி நகரை சேர்ந்த சுதானந்தம் (61) என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம், பொருட்கள் திருடப்பட்டன. இதுதொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
4 பேர் கைது
தொடர்ந்து கொள்ளையர்களை பிடிப்பதற்காக தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ் மேற்பார்வையில், சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
அப்போது, அந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தூத்துக்குடி இந்திராநகரைச் சேர்ந்த சுப்புக்கனி மகன் மாரிச்செல்வம் (19), கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் மகன் முனீஸ்துரை (21) மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 4 பேரும் சேர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 32 பவுன் தங்கநகைகளையும் மீட்டனர். மேலும் இவர்கள் வேறு எங்கெங்கு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story