மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2021 7:34 PM IST (Updated: 18 Oct 2021 7:34 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. அப்போது ஓய்வூதியம் கேட்டு மூதாட்டி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊட்டி

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. அப்போது ஓய்வூதியம் கேட்டு மூதாட்டி  வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

குறைதீர்க்கும் கூட்டம்

ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகள் அடங்கிய மனுக்களை கொண்டு வந்து அளித்தனர். இந்த மனுக்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, ஒப்புகைச்சீட்டு வழங்கப்பட்டது. கோரிக்கை மனு அளிக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சாலை, குடிநீர், தடுப்புச்சுவர், தொகுப்பு வீடு போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கொடுக்கப்பட்டது. மனு அளிக்க வந்த பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்களிடம் இருந்து 118 மனுக்கள் பெறப்பட்டது.

வாக்குவாதம்

இந்த மனுக்கள் மீது துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உரிய காரணம் இல்லாமல் மனுக்களை நிராகரிக்கக் கூடாது. பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

இதற்கிடையில் மூதாட்டி ஒருவர் தனக்கு ஓய்வூதிய பணம் வரவில்லை என்று அரசு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உதவித்தொகை
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்த அமுதா என்பவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.10 ஆயிரத்துகான காசோலை, குமரன் நகரை சேர்ந்த சசிகுமார், விக்டோரியா ஹால் பகுதியை சேர்ந்த ஜாய்ஸ் ஆகியோருக்கு மருத்துவ சிகிச்சைக்காக தலா ரூ.20 ஆயிரத்துக்கான காசோலை, 2 பேருக்கு கல்வி உதவித்தொகை தலா ரூ.20 ஆயிரத்துக்கான காசோலை உள்பட 6 பேருக்கு ரூ.90 ஆயிரம் உதவித்தொகையை கலெக்டர் வழங்கினார்.

மேலும் குன்னூர் தாலுகாவை சேர்ந்த 5 பேருக்கு தலா ரூ.1,000 முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story