கல்லால் தாக்கி வாலிபர் கொலை


கல்லால் தாக்கி வாலிபர் கொலை
x
தினத்தந்தி 18 Oct 2021 7:47 PM IST (Updated: 18 Oct 2021 7:47 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோத்தகிரி

கோத்தகிரியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள சோகத்தொரை கிராமத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் அஜய்(வயது 21). கோத்தகிரி மார்க்கெட்டில் உள்ள ஒரு மீன் கடையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அஜய் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் சம்பளம் வாங்கி வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோத்தகிரிக்கு சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

கல்லால் தாக்கி கொலை

இதற்கிடையில் நேற்று காலை 8 மணியளவில் கோத்தகிரி காந்தி மைதான புயல் நிவாரண கூடம் அருகே உள்ள ஒரு மறைவான இடத்தில் தலையில் பலத்த காயத்துடன் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், கொலை நடந்த இடத்தில் ஆய்வு செய்தார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தது அஜய் என்பதும், கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

கண்காணிப்பு கேமராவில்...

மேலும் அவரது மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவை காணாமல் போயிருந்தது. பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். 

அப்போது காணாமல் போன மோட்டார் சைக்கிளை அவரது நண்பரான கட்டபெட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்த தீபன்(20) என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் குஞ்சப்பனை சோதனைச்சாவடி வழியாக சமவெளி பகுதியை நோக்கி செல்வது, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

பரபரப்பு

அவர் அஜய் வேலை பார்த்த மீன் கடைக்கு அருகில் உள்ள கோழி இறைச்சி கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்து உள்ளார். இதனால் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் கொலை செய்தது அவரா? அல்லது வேறு யாரேனுமா?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story