குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி


குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 18 Oct 2021 7:47 PM IST (Updated: 18 Oct 2021 7:47 PM IST)
t-max-icont-min-icon

கொளப்பள்ளி-கூடலூர் இடையே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பந்தலூர்

கொளப்பள்ளி-கூடலூர் இடையே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மிகவும் மோசமான சாலை

நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளியில் இருந்து எலியாஸ் கடை வழியாக கூடலூருக்கு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக கூடலூர் அரசு போக்குவரத்துக்கழக கிளையில் இருந்து கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, நம்பியார்குன்னு, கோவை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் தினமும் ஏராளமான தனியார் வாகனங்களும் சென்று வருகின்றன.

இந்த நிலையில் கொளப்பள்ளி-கூடலூர் சாலையானது பல்வேறு இடங்களில் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக கொளப்பள்ளியில் இருந்து எலியாஸ் கடை மற்றும் அய்யன்கொல்லி வரை சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

உயிருக்கு பாதுகாப்பு இல்லை

இதுகுறித்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
கொளப்பள்ளி-கூடலூர் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் விழுந்து உள்ளன. பலத்த மழை பெய்யும்போது, அந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

சில நேரங்களில் வாகனங்கள் பழுதாகி நடுவழியில் நின்று விடுகின்றன. காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும் சாலை என்பதால், வாகன ஓட்டிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story