ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2021 4:20 PM GMT (Updated: 18 Oct 2021 4:20 PM GMT)

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்:
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை 
நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ராஜா கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். இதில் மாநில மகளிர் அணி செயலாளர் கவுசல்யா கலந்து கொண்டு பேசினார். 30 ஆண்டுகால பணி காலத்தை கருத்தில் கொண்டு கிராம ஊராட்சி மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு, சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவற்றை வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை அரசு கருவூலம் மூலமாக வழங்க வேண்டும். ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் பதிவுறு எழுத்தருக்கு உரிய அனைத்து அரசின் சலுகைகளையும் உடனே வழங்க வேண்டும். 18 ஆண்டுகளாக தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் வட்டார, மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியம் ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய அனைத்து நிலை ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்களுக்கும் அரசு அறிவித்த ரூ.15,000 ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும். கொரோனா நோய் தொற்றால் இறந்த முன் களப்பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் குடும்ப நல நிதியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
திருமருகல் 
திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.  ஒன்றிய பொருளாளர் அனிதாராணி வரவேற்றார். ஊராட்சி செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய செயலாளர் தண்டபாணி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
முடிவில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் நன்றி கூறினார்.
கீழ்வேளூர்
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கணேஷ்குமார் வரவேற்றார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்வேந்திரன், அன்புச்செல்வன், சத்தியநாராயணன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட இணை செயலாளர் ராஜசேகர், மாவட்ட அமைப்பு செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். முடிவில் ஒன்றிய பொருளாளர் செல்லத்துரை நன்றி கூறினார்.
தலைஞாயிறு 
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் சக்திவேல் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் மதன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் முரளி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Next Story