செந்துறையில் தபால் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
செந்துறையில் தபால் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செந்துறை:
நத்தம் அருகே செந்துறை சார்பதிவாளர் அலுவலகம் அருகே தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் செந்துறையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த தபால் நிலையத்தில் தங்கமகள் திட்டம், தொடர் வைப்பு என பல்வேறு திட்டங்களில் நாங்கள் பணத்தை வைப்பு நிதியாக செலுத்தியுள்ளோம். ஆனால் கடந்த 4 மாதங்களாக சர்வர் பிரச்சினை, இணையதள வசதியில் பிரச்சினை எனக்கூறி தபால் துறை ஊழியர்கள் வாடிக்கையாளர்களின் பணத்தை கொடுப்பதும் இல்லை. அதேபோல் மக்களிடம் இருந்து வைப்பு நிதியை பெறுவதும் இல்லை. இதனால் பணம் எடுக்க முடியாமலும், வைப்பு நிதியை செலுத்த முடியாமலும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறோம். குறிப்பாக முதியோர் உதவித்தொகை பெற முடியாமல் பலரும் தவிக்கின்றனர்.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட தபால் துறை அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story