நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் கூடுதல் படகுகள் இயக்கப்படும்
தினத்தந்தி செய்தி எதிரொலியாக நோணாங்குப்பம் படகு குழாமில் ஆய்வு செய்த அமைச்சர் லட்சுமிநாராயணன், சுற்றுலா பயணிகள் வசதிக்காக கூடுதல் படகுகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.
அரியாங்குப்பம், அக்.
தினத்தந்தி செய்தி எதிரொலியாக நோணாங்குப்பம் படகு குழாமில் ஆய்வு செய்த அமைச்சர் லட்சுமிநாராயணன், சுற்றுலா பயணிகள் வசதிக்காக கூடுதல் படகுகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.
சுற்றுலா பயணிகள் அவதி
புதுச்சேரியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று நோணாங்குப்பம் படகு குழாம். இங்கு வார இறுதிநாட்கள், தொடர் விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள். அந்த வகையில் கடந்த வாரம் ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
படகு குழாமில் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நுழைவுக்கடடணம் மீண்டும் வசூலிக்கப்பட்டதால் சுற்றுலா பணிகள் அதிருப்தி அடைந்தனர். மேலும் படகு சவாரிக்கு டிக்கெட் எடுக்க, படகில் ஏற வரிசை என்று சுற்றுலா பயணிகள் கடும் வெயிலில் நீண்டநேரம் நின்று அவதிப்பட்டனர். இது குறித்து தினத்தந்தியில் நேற்று முன்தினம் செய்தி பிரசுரிக்கப்பட்டது.
அமைச்சர் ஆய்வு
இதன் எதிரொலியாக சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் படகு குழாமில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஏன் இயக்கப்படவில்லை என்று படகு குழாம் அதிகாரிகளிடம் கேட்டபோது, ஊழியர்கள் பற்றாக்குறையால் இயக்கப்படாதது தெரியவந்தது. பின்னர் படகு குழாமை அவர் சுற்றி பார்த்தாது, சுற்றுலா பயணிகளுக்கு செய்யவேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நுழைவு கட்டணம்
இந்த ஆய்வு குறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
படகு குழாமில் சுற்றுலா பயணிகள் அவதிப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா பணிகளின் கூட்டத்துக்கு ஏற்ப கூடுதலாக படகுகள் இயக்கப்படும். நுழைவுக்கட்டணத்தை தொடர்ந்து வசூலிப்பதா, வேண்டாமா? என்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
சுற்றுலா பயணிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள், வரிசையில் நிற்கும் இடத்தில் நிழற்பந்தல் அமைக்கப்படும். பாரடைஸ் பீச்சில் சேதமடைந்துள்ள சிறு குடில்கள் சீரமைக்கப்படும்.
இவ்வாறு அமை்சர் லட்சுமிநாராயணன் கூறினார். ஆய்வின்போது அரியாங்குப்பம் எம்.எல்.ஏ. பாஸ்கரன் மற்றும் படகு குழாம் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story