கூத்தாநல்லூர்:-
கூத்தாநல்லூர், நீடாமங்கலம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
வேளுக்குடி ருத்ரகோடீஸ்வரர்
கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ருத்ர கோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் கைலாச கோலத்தில் ருத்ர கோடீஸ்வரராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. அப்போது ருத்ரகோடீஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள்பொடி மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி விசாலாட்சி சமேத காசிவிசுவநாதர், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர் பிரகார உலாவும் நடந்தது. இதேபோல் நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில், பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.