ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கில் வங்கி கிளை மேலாளர் உள்பட 3 பேர் கைது
ராமநாதபுரம் அருகே உள்ள நயினார்கோவில் கூட்டுறவு வங்கியில் ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கில் வங்கி கிளை மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள நயினார்கோவில் கூட்டுறவு வங்கியில் ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கில் வங்கி கிளை மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கி மேலாளர்
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவிலில் மத்திய கூட்டுறவு வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில் கடந்த 2012-ம் ஆண்டு மே 18-ந் தேதி முதல் 2018 ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் வங்கி கிளை மேலாளராக பரமக்குடி கோகுலர் தெருவை சேர்ந்த பூமிபாலன் என்பவரின் மனைவி பூரண சந்திரமதி (வயது48) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் தனது பணி காலத்தில் வங்கியில் 59 போலியான சேமிப்பு கணக்குகளை தொடங்கி 76 மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் 2 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு கடன் வழங்கியதாக கணக்கு எழுதி உள்ளார். இவ்வாறு தொடங்கப்பட்ட போலி சேமிப்பு கணக்குகளில் செலுத்திய கடன் தொகையில் ரூ.1 கோடியே 45 லட்சத்து 60 ஆயிரத்தை ரொக்கமாக எடுத்துள்ளார்.
கையாடல்
அப்போது வங்கி காசாளராக இருந்த பரமக்குடி கஞ்சி யேந்தல் சுப்பிரமணியன் மகன் சத்தியமூர்த்தி (41) மற்றும் அவர் விடுப்பில் இருந்தபோது பொறுப்பில் இருந்த உதவியாளர் பரமக்குடி பாரதிநகர்மேற்கு ஸ்ரீகாந்த் மனைவி சுந்தரகாளீஸ்வரி (45) ஆகியோருடன் சேர்ந்து இந்த பணத்தினை கையாடல் செய்தாராம். இந்த தொகையை 3 பேரும் பங்கு போட்டு கொண்டார்களாம். இதுகுறித்து ஆய்வுக்குழுவின் விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து மேற்கண்ட 3 பேரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாக கூட்டுறவு துணை பதிவாளர் கோவிந்தராஜன் ராமநாதபுரம் வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கிளை மேலாளராக பணியாற்றி வந்த பூரணசந்திரமதி, காசாளர் சத்தியமூர்த்தி, உதவியாளர் சுந்தரகாளீஸ்வரி ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கையாடல் செய்த தொகையில் ரூ.22 லட்சத்து 57 ஆயிரத்து 269 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கியில் ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கில் மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story