ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை கடலூரில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி


ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை கடலூரில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 18 Oct 2021 10:56 PM IST (Updated: 18 Oct 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடலூர், 

பேட்டி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வாரத்திற்கு ஒரு ஆணவ கொலை நடக்கிறது. இச்செயல் மிகவும் அவமானகரமானது. இதுதொடர்பாக கட்சி சார்பில் கடலூர் மாவட்டத்தில் கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு பிரசார இயக்கம் நடத்த உள்ளோம்.

மோதல் போக்கு

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கையை விட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இது ஆபத்தான போக்கு என்றும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற அவரது பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். இரு மதங்களுக்கு இடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் வகையில் பேசிய அவரை ஏன் கைது செய்யவில்லை. மேலும் இந்து கோவில்களை, இந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். கோவில்கள் வழிபாட்டு தலங்களாக மட்டும் இல்லாமல் பண்பாட்டு சின்னங்களாகவும், பொக்கிஷங்களாகவும் இருந்து வருகிறது. அதனை எப்படி தனியாரிடம் ஒப்படைப்பது. இது கோவில்களில் உள்ள சொத்துக்களை கபளீகரம் செய்யும் முயற்சியாகவே உள்ளது. இந்த கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க கூடாது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே கோவில் சொத்துகள் பாதுகாப்பாக இருக்கும்.

சட்ட திருத்தம்

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 4 கல்லூரிகள் திறக்கப்படும் நேரத்தில், அங்கு இந்துக்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரையும் பணியில் அமர்த்த வேண்டும். மேலும் அக்கல்லூரியை உயர்கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அதற்கு தேவையான சட்ட திருத்தங்களை அரசு கொண்டு வர வேண்டும்.
மேலும் இன்று (அதாவது நேற்று) அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தது. அதில் எந்த தவறும் இல்லை. ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

23-வது மாநாடு

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் நகர 23-வது மாநாடு நடந்தது. இதற்கு ஆனந்த் கருணாகரன் சாந்தா குமாரி தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மருதவாணன், கருப்பையன், சுப்பராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த தோழர் கிருஷ்ணமூர்த்தி, மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். ஸ்டாலின், அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். நகர் குழு உறுப்பினர் செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். நகர செயலாளர் அமர்நாத், அறிக்கையை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். மாநாட்டில், கடலூரில் மருத்துவ கல்லூரி தொடங்கிட வேண்டும். அரசு பெண்கள் கலைக்கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரி, சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story