திருடிய மாட்டை வளர்த்தவரிடமே ஆன்லைனில் விற்க முயன்ற கும்பல்


திருடிய மாட்டை வளர்த்தவரிடமே ஆன்லைனில் விற்க முயன்ற கும்பல்
x
தினத்தந்தி 18 Oct 2021 11:15 PM IST (Updated: 18 Oct 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

திருடிய மாட்டை வளர்த்தவரிடமே ஆன்லைனில் விற்க முயன்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

காரைக்குடி, 
காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியைச் சேர்ந்தவர் அர்ச்சகர் ரமேஷ் (வயது51). இவர் தனது வீட்டில் கன்றுகுட்டி மற்றும் 3 மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். இதில் ஒரு மாடு சினையுடன் இருந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 12-ந்தேதி அன்று இரவு இவரது வீட்டில் கட்டப்பட்டு இருந்த இந்த மாடு மற்றும் கன்றுக்குட்டிகளை மாடுகளை குறி வைத்து திருடும் கும்பல் ஒன்று திருடி சென்றுள்ளது. 
இதையடுத்து இதுகுறித்து என்ன செய்வது என்று தெரியாமல் ரமேஷ் இருந்துள்ளார். இந்தநிலையில் திருடுபோன அவரது மாடுகளை ரூ.1.50 லட்சத்திற்கு விற்பனைக்கு உள்ளது என ஆன் லைன் மூலம் விளம்பரம் போட்டோவுடன் வந்துள்ளது. இதைப்பார்த்த ரமேஷ் அந்த படத்தில் உள்ளது தனது மாடுகள் தான் என்பதை தெரிந்துகொண்டு இந்த ஆன் லைன் விளம்பரத்தை எடுத்துச் சென்று செட்டிநாடு போலீசாரிடம் தெரிவித் துள்ளார். 
இதைப்பார்த்த செட்டிநாடு போலீசார் அந்த ஆன் லைன் விளம்பரத்தில் உள்ள போன் நம்பரை தொடர்பு கொண்டு அந்த மாடுகளை வாங்குவது போல் விலை பேச கூறி அறிவுரைகளை ரமேஷிடம் வழங்கி உள்ளனர். அதன்படி அந்த கும்பலை தொடர்பு கொண்ட ரமேஷ் அந்த மாடு மற்றும் கன்றுகளை தான் நேரில் வந்து வாங்கிக் கொள்வதாக கூறி அதற்குரிய தொகையையும் நேரில் வந்து கொடுப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த கும்பல் அவரை பணத்துடன் திருப்பத்தூர் அருகே கொங்கரத்தியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்திற்கு வந்து மாட்டை வாங்கிச் செல்லும்படி கூறியுள்ளனர். இதையடுத்து அங்கு சென்று ரமேஷ் பார்த்தபோது அந்த தோட்டத்தில் தனது 3 மாடுகள் மற்றும் கன்றுக்குட்டியும், சினையுடன் இருந்த மாடு ஈன்ற கன்றுக்குட்டியும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரிடம் அவர் தகவல் கொடுத்தார்.  போலீசார் அங்கு சென்று அந்த மாட்டை மீட்டு அங்கிருந்த தோட்டத்தின் உரிமையாளரிடம் விசாரித்தனர். அப்போது இரவு நேரத்தில் வந்த 3 பேர் கும்பல் இந்த மாடுகளை தனது தோட்டத்தில் விட்டுச் சென்றதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாணை நடத்திய போது இந்த மாடுகளை காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஒருவரும், குன்றக்குடி பகுதியைச் சேர்ந்த 2 பேரும் சேர்ந்து திருடி வந்து இங்கு விட்டுச் சென்றது தெரிய வந்தது. 
மேலும் போலீசார் அங்கு வந்து ரகசியமாக விசாரணை நடத்தியதை முன்கூட்டியே தெரிந்த அந்த கும்பல் மாடுகளை மட்டும் விட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து செட்டிநாடு போலீசாரிடம் கேட்டபோது, 3 பேரையும் கைது செய்து மேல் விசாணை நடத்த உள்ளோம் என்று தெரிவித்தனர்.

Next Story