விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே பொதுமக்கள் சாலை மறியல்


விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 Oct 2021 6:26 PM GMT (Updated: 18 Oct 2021 6:26 PM GMT)

அரியலூர்திருக்கை ஊராட்சி தலைவர் தேர்தலில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் அரியலூர்திருக்கை கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சசிகலா ரவி மற்றும் அவரது தரப்பினர், கிராம மக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10.45 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவுவாயில் எதிரே திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். இந்த மறியலால் விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி

உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சசிகலா ரவி கூறுகையில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நான் 980 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட வனிதா 993 வாக்குகள் பெற்றதாகவும், வசந்தா 797 வாக்குகள் பெற்றதாகவும், செல்லாத வாக்குகள் 91 எனவும் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். வாக்கு எண்ணும்போது எனக்கு பதிவான 15 வாக்குகளை மற்ற வேட்பாளரின் கணக்கில் வைத்தனர். இதுபற்றி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்ட பின்னர் 13 வாக்குகள் வித்தியாசம் வருவதாகவும், அனைத்து வாக்குகளும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் கூறினார்.ஆனால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தாமல் வனிதா 13 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டதாக அறிவித்து விட்டனர். எனவே அரியலூர் திருக்கை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்றார்.

முற்றுகை

 பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுப்பதற்கு அனைவரும் திரண்டு சென்றனர். உடனே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அனைவரும் செல்லக்கூடாது என்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். பின்னர் அவர்களில் சிலரை மட்டும் கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளே அனுப்பி வைத்தனர். அதன்பேரில் அவர்கள், மாவட்ட கலெக்டர் டி.மோகனை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்ற அவர், இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினார். அதன் பிறகு அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story