நெல்லையில் 4 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
நெல்லையில் 4 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 4 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் அருகில் ஒரு பெண் 4 குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்தார். அவர் திடீரென பையில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக ஓடிச் சென்று மண்எண்ணெய் கேனை அந்த பெண்ணிடம் இருந்து பறிமுதல் செய்தனர். தீக்குளிக்கும் முயற்சியை முன்னதாகவே தடுத்து நிறுத்தினர்.
தேர்தல் பிரச்சினை
பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை கிராமத்தை சேர்ந்த ராஜன் என்பவரின் மனைவி சுமதி (வயது 38) என்பது தெரியவந்தது. அவர் தனது தாய் லட்சுமி மற்றும் 2 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகளை அழைத்து வந்திருந்ததும் தெரியவந்தது.
அவர் கூறுகையில், ‘‘உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக 2 தரப்புக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக என்னை தாக்கியவர்கள் மீது கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை. இதுதவிர உள்ளாட்சி தேர்தலில் ஒருவருக்கு ஓட்டு போடவில்லை என்று கூறி, என்னுடைய கணவர் ராஜனை கும்பல் தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த அவர், குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தொடர்ந்து எங்கள் குடும்பத்தினரை மிரட்டி வருகிறார்கள். வியாபாரத்துக்காக வாங்கி வைத்திருந்த மீன்களை விற்பனை செய்ய விடாமல் இடையூறு செய்கிறார்கள்’’ என்றார்.
பரபரப்பு
இதையடுத்து போலீசார், சுமதிக்கு ஆறுதல் கூறி கலெக்டரை நேரில் சந்திக்க வைத்து புகார் மனுவை வழங்க செய்தனர். பின்னர் கலெக்டர் விஷ்ணு உத்தரவுப்படி போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story