வீரகேரளம்புதூர் அருகே அரசு ஆஸ்பத்திரி அமைக்க கோரி கலெக்டரிடம் மனு


வீரகேரளம்புதூர் அருகே அரசு ஆஸ்பத்திரி அமைக்க கோரி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 19 Oct 2021 1:35 AM IST (Updated: 19 Oct 2021 1:40 AM IST)
t-max-icont-min-icon

வீரகேரளம்புதூர் அருகே அரசு ஆஸ்பத்திரி அமைக்க கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்


தென்காசி:
ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வந்தது. கொரோனா தொற்று காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது நோய்தொற்று குறைந்ததை தொடர்ந்து கூட்டம் நடக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா முன்னிலை வகித்தார். அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற கலெக்டர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். மொத்தம் 281 மனுக்கள் பெறப்பட்டன.

அரசு ஆஸ்பத்திரி 

வீரகேரளம்புதூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் ஊர் பொதுமக்களுடன் வந்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
வீரகேரளம்புதூர் தாலுகா அச்சங்குன்றம் கிராமத்தில் ஊரின் நடுவே 6 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்காக சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். இதுகுறித்து ஏற்கனவே மாவட்டம் பிரிப்பதற்கு முன்பு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்து அந்த பணி நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் எந்தவித அனுமதியும் இல்லாமல் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்காக முயற்சி நடைபெறுகிறது. எங்களது ஊரில் அரசு ஆஸ்பத்திரி இல்லை. எனவே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் அரசு ஆஸ்பத்திரி அமைத்து தர கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மருதம்புத்தூர் கிராமம் மேலத்தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், “குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு ஏற்பாடு நடைபெறுகிறது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

கோவிலில் வழிபட உரிமை

புளியங்குடி நகராட்சி டி.என்.புதுக்குடி இந்து நாடார் உறவின் முறை மகமை கமிட்டி செயலாளர் ராதாகிருஷ்ணன் கொடுத்துள்ள மனுவில், “எங்களது சமூகத்திற்கு சொந்தமான மாரியம்மன் கோவில் எங்களது ஊரில் அமைந்துள்ளது. எங்களை கோவிலுக்குள் செல்லக்கூடாது என ஒரு தரப்பினர் தடுக்கிறார்கள். எனவே எங்களுக்கு கோவிலில் வழிபடும் உரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது. 
இதேபோல் பல்வேறு அமைப்பினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Next Story