புகார் பெட்டி
சாலை சீரமைக்கப்படுமா?
சாலை சீரமைக்கப்படுமா?
திருப்பதிசாரத்தில் இருந்து வீரநாராயணமங்கலம் செல்லும் சாலை தேரேகால்புதூர் ஆற்றின் கரையோரத்தில் செல்கிறது. இந்த சாலையில் தேரேக்கால்புதூர் ஆற்றின் கரையோரத்தில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், வாகனங்கள் விபத்தில் சிக்கி ஆற்றில் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த தடுப்பு சுவரையும், சாலையையும் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுகன்த், தெற்கு திருப்பதிசாரம்.
பஸ் வசதி தேவை
நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து தடம் எண் 37 ஏ உசர விளைக்கு இயக்கப்படுகிறது. இந்த பஸ் தினமும் 4 முறை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் மற்ற நேரங்களில் பஸ் இல்லாததால் வேலைக்கு செல்லும் ஆண்கள்-பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, அந்த பஸ்சை கூடுதல் முறை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெருமாள், உசரவிளை.
ஓடையை தூர்வார வேண்டும்
தேரேகால்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாஞ்சில் நகர்(தெற்கு) 7-வது தெருவில் சாலையோரத்தில் உள்ள வடிகால் ஓடை முறையாக பராமரிக்கப்படாததால் தண்ணீர் வடிந்தோட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வடிகால் ஓடையை தூர்வார வேண்டும்.
-ராமன், தெற்கு நாஞ்சில் நகர்.
பாலத்தை சீரமைக்க வேண்டும்
அருமநல்லூரில் இருந்து தடிக்காரன்கோணம் செல்லும் சாலையில் பழையாற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அத்தியாவசிய தேவைக்கு கூட செல்ல முடியாமல் பல கிேலாமீட்டர் சுற்றி செல்லும் நிலைக்கு அந்த பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகேந்திரன், காந்திநகர்.
விபத்து அபாயம்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 29-வது வார்டு மேல கருப்புக்கோட்டையில் முத்தாரம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் உள்ள மின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு எரிவதற்கு சுவிட்சு பெட்டி சேதமடைந்து திறந்த நிலையில் காணப்படுகிறது. குழந்தைகள், பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுவிட்சு பெட்டியை மாற்றி பாதுகாப்பாக அமைக்க வேண்டும்.
-கரிகாலன், ஊட்டுவாழ்மடம்.
எரியாத விளக்குகள்
தெங்கம்புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குஞ்சன்விளையில் கடந்த 2 வாரங்களாக தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் இரவு நேரம் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அச்சத்தில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, குஞ்சன்விளை.
பராமரிப்பில்லாத நீர்த்தேக்க தொட்டி
ஏழுதேசம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராத்தூரில் கிறிஸ்தவ ஆலயம் அருகில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் கீழ் பகுதி பராமரிக்கப்படாமல் செடி கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. தோட்டியில் பல இடங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நீர்த்தேக்க தொட்டி சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும்.
-ஜோ, கிரத்தூர்.
சேதமடைந்த சாலை
திருநந்திக்கரை அஞ்சுகண்டறை பகுதியில் கோதையாறு இடது கரை கால்வாய் செல்கிறது. சாலையோரம் உள்ள இந்த கால்வாய் கரையில் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடனேயே செல்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து கால்வாய் கரை பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
-விஷாத், அஞ்சுகண்டறை.
Related Tags :
Next Story