பொதுமக்கள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் உத்தரவு


பொதுமக்கள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் உத்தரவு
x
தினத்தந்தி 19 Oct 2021 2:18 AM IST (Updated: 19 Oct 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களின் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு ஆணையாளர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

சேலம்,
குறைதீர்க்கும் முகாம்
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு ஆணையாளர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து குடிநீர் இணைப்பு, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட 65 மனுக்களை பெற்றார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த வாரம் 101 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது தீர்வு காணும் வகையில் மனு அளித்தவர்களை தொடர்பு கொண்டு நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுகிறது. அதன்படி கொண்டலாம்பட்டி மண்டலம் குறிஞ்சி நகரில் வீடுகளுக்கு வரி விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மனு கொடுத்தனர். அதன்படி ஆய்வு செய்யப்பட்டு ஆவணங்களின் அடிப்படையில் 4 வீடுகளுக்கு வரி விதிக்க உத்திரவிடப்பட்டதற்கான ஆணை தற்போது வழங்கப்பட்டுள்ளது.
மனுக்கள் மீது தனிக்கவனம்
முகாமில் பெறப்படும் மனுக்களில் குறிப்பிட்ட மனுக்கள் மீது நேரடியாக ஆய்வு செய்யப்படுகிறது. பொதுமக்கள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. டெங்கு கொசுக்கள் பரவாமல் தடுக்க குடியிருப்பு பகுதிகளில் பயன்படுத்தப்படாத பொருட்களை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஓய்வு பெற்ற அலுவலக உதவியாளர் காந்திக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள ஓய்வூதிய பயன்களில் ஒரு பகுதியான தொகுப்பு தொகை ரூ.2 லட்சத்து 43 ஆயிரத்து 465-க்கான காசோலை மற்றும் விண்ணப்பித்த சிறிது நேரத்தில் ஒருவருக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சாக்கடை கால்வாய்
பின்னர் சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட படையப்பா நகர், கோவிந்தம்மாள் நகர் விரிவாக்கம் பகுதியில் 600 மீட்டர் நீளத்திற்கு சாக்கடை கால்வாய் அமைக்க ரூ.24 லட்சம் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதில் படையப்பா நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் 3-ல் ஒரு பங்கு தொகையான ரூ.8 லட்சத்திற்கான காசோலையை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜிடம் சங்க நிர்வாகிகள் வழங்கினர். இதில் மாநகர பொறியாளர் அசோகன், மாநகர நல அலுவலர் யோகானந்த், உதவி ஆணையாளர் ரமேஷ்பாபு உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story