இ-சேவை மைய பெண் ஊழியர் சாவு: ‘கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன்' கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்


இ-சேவை மைய பெண் ஊழியர் சாவு: ‘கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 19 Oct 2021 2:18 AM IST (Updated: 19 Oct 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

தலைவாசல் அருகே பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில், கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் கொன்றதாக அவரது கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தலைவாசல், 
பெண் ஊழியர் கொலை
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகுவேல் (வயது 57). இவர் தலைவாசலில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். இவருக்கு 2 மனைவிகள். இதில் முதல் மனைவியான சித்ரா (45), வீரகனூரில் உள்ள வங்கி ஒன்றின் இ-சேவை மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். 2-வது மனைவி கவிதா கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக உள்ளார். 
அழகுவேல் 2-வது மனைவியை பிரிந்து, முதல் மனைவி சித்ரா மற்றும் 2 மகன்களுடன் நாவலூரில் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி வீட்டின் அருகே சித்ரா பிணமாக கிடந்தார். அவரது முகம் உள்பட பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. இதனால் அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து சித்ராவின் தந்தை சின்னசாமி வீரகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி இருந்தார். 
பரபரப்பு வாக்குமூலம்
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகத்தின் பேரில் அழகுவேலை பிடித்து துருவி, துருவி விசாரித்தனர். அப்போது அவர் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
எனது உறவினர் பெண்ணுக்கு வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இந்தநிலையில் எனது மனைவி சித்ராவும் அந்த வாலிபருடன் அடிக்கடி போனில் பேசி வந்தார். இதனால் அவர்களுக்கிடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. அவர்கள் பேசிய ஆடியோவை எனது மகன் தனுஷ் காண்பித்தான். 
கள்ளக்காதலனுடன் உல்லாசம்
இதையடுத்து நான் சித்ராவை கண்டித்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனிடையே கடந்த 13-ந் தேதி இரவு வீட்டை விட்டு, வெளியே சென்ற சித்ராவை நீண்ட நேரமாக காணவில்லை. இதனால் சந்தேகமடைந்த நான் வீட்டின் அருகே சென்று பார்த்தேன். அப்போது சித்ரா, தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்தார்.
இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. நான் வருவதை பார்த்து கள்ளக்காதலன் அங்கிருந்து ஓடி விட்டான். இதையடுத்து நான் சித்ராவின் தலையை பிடித்து, தரையில் அடித்தேன். மேலும் அவரது முகத்தை தரையில் அமுக்கி கொலை செய்தேன்.
கைது
இதனால் மயக்கமடைந்த சித்ரா, சிறிது நேரத்தில் இறந்து விட்டார். இதையடுத்து நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி என்னை பிடித்து விட்டனர். 
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர்.
இதையடுத்து போலீசார் அழகுவேலை கைது செய்தனர்.
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் வங்கி இ-சேவை மைய பெண் ஊழியரை கணவர் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story