நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கோரி கலெக்டரிடம் மனு
கல்லிடைக்குறிச்சியில் மழையால் வீணாகும் அபாய நிலையில் உள்ள நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி குறை தீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்து, உள்ளாட்சி தேர்தல் முடிந்து விட்டதால் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அனைத்து துறை அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டு தங்களது துறை ரீதியான கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைக்கு கொண்டு சென்றனர்.
நெல் கொள்முதல்
கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
கல்லிடைக்குறிச்சியில் நெல் கொள்முதல் நிலையத்தில் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கி உள்ளது. தினசரி கொள்முதல் செய்ய வேண்டிய 1,000 மூட்டைகள் கூட கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அபாய நிலையில் உள்ளது. கடந்த மாதம் 20-ந்தேதி பதிவு செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கூட இதுவரை கொள்முதல் செய்யப்படவில்லை. எனவே விவசாயிகள் கொண்டு வந்துள்ள அனைத்து நெல் மூட்டைகளையும் உடனே கொள்முதல் செய்து பாதுகாப்பு குடோன்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
பஞ்சாயத்து தேர்தல்
நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்த சங்கரபாண்டியன் மனைவி நல்லகண்ணும்மாள் (வயது 52). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
நாங்குநேரி ஒன்றியம் மறுகால்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டேன். என்னுடன் 4 பேரும் போட்டியிட்டார்கள். இந்த நிலையில் தருவை பஞ்சாயத்து வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களின் பெயர்கள், மறுகால்குறிச்சி பஞ்சாயத்து 9-வது வார்டில் இடம்பெற்றுள்ளது. எனவே அவர்கள் 2 கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 2 வாக்குச்சாவடிகளிலும் வாக்களிக்க வாய்ப்பு இருப்பதால் செல்லாத வாக்காகி விடும். இதுதொடர்பாக தேர்தல் அலுவலரிடம் முறையிட்டும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தவில்லை. எனவே மறுகால்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் பதவி ஏற்பு நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு, மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதேபோல் பல்வேறு தரப்பினர் கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை நேரில் வழங்கினர்.
Related Tags :
Next Story