மதுக்கடையை இடமாற்றம் செய்யக்கோரி சாலை மறியல்


மதுக்கடையை இடமாற்றம் செய்யக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Oct 2021 2:33 AM IST (Updated: 19 Oct 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

சேதுபாவாசத்திரம் அருகே மதுக்கடையை இடமாற்றம் செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சேதுபாவாசத்திரம்;
சேதுபாவாசத்திரம் அருகே மதுக்கடையை இடமாற்றம் செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 
மதுக்கடை
சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஆண்டிக்காடு எல்லை ரோடு பள்ளத்தூரில் மதுக்கடை உள்ளது. இந்த மதுக்கடை பள்ளி மாணவ- மாணவிகளுக்கும், கோவிலுக்கு செல்லும் மக்களுக்கும் இடையூறாக உள்ளது என கூறி அந்த கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும்  எவ்வித பயனும் இல்லை என கூறி கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவிக்க போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்தனர். 
பேச்சுவார்த்தை
இதனால் பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் கடையை 30 நாட்களுக்குள் இடமாற்றம் செய்து தருவதாக உறுதியளிக்கப்பட்டது இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் அதன் பிறகும் மதுக்கடையை இடமாற்றம் செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை சாலை பள்ளத்தூர் கடைவீதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். எனவே சுமார் 2 மணி நேரம்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
கைது
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை தாசில்தார் கணேஷ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலகண்ணன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாததால் சாலைமறியலில் ஈடுபட்ட 100- க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Next Story