80 சதவீத குற்ற வழக்குகளுக்கு கைரேகைகள் மூலம் துப்பு கிடைத்தது


80 சதவீத குற்ற வழக்குகளுக்கு கைரேகைகள் மூலம் துப்பு கிடைத்தது
x
தினத்தந்தி 19 Oct 2021 3:01 AM IST (Updated: 19 Oct 2021 3:01 AM IST)
t-max-icont-min-icon

கடந்த ஆண்டில் பெங்களூருவில் 80 சதவீத குற்றவழக்குகளுக்கு கைரேகை மூலம் துப்பு கிடைத்து உள்ளது.

பெங்களூரு: கடந்த ஆண்டில் பெங்களூருவில் 80 சதவீத குற்றவழக்குகளுக்கு கைரேகை மூலம் துப்பு கிடைத்து உள்ளது.

80 சதவீதம்

பொதுவாக கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் சம்பவ இடத்தில் ஏதாவது ஒரு தடயத்தை விட்டு செல்வார்கள். அந்த தடயத்தின் மூலம் அவர்களை போலீசார் கைது செய்வது வழக்கமாக நடப்பது ஆகும். இந்த நிலையில் கடந்த ஆண்டு(2020) பெங்களூருவில் 80 சதவீத குற்றவழக்குகளுக்கு, குற்றவாளிகளின் கைரேகைகள் மூலம் துப்பு கிடைத்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

பெங்களூரு ஜாலஹள்ளி எம்.இ.எஸ். ரோட்டில் ஒரு நகைக்கடை உள்ளது. அந்த நகைக்கடைக்குள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புகுந்த மர்மகும்பல், துப்பாக்கியை காட்டி அங்கிருந்தவர்களை மிரட்டி ரூ.90 லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்றது. இதையடுத்து அங்கு வந்த தடய அறிவியல் நிபுணர்கள் நகைக்கடையில் பதிவாகி இருந்த மர்மகும்பலின் கைரேகைகளை பதிவு செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். 

அப்போது தடய அறிவியல் மையத்தில் ஏற்கனவே இருந்த ஒரு கைரேகையுடன், மர்மகும்பலை சேர்ந்த ஒருவரின் கைரேகை ஒத்துப்போனது. அந்த கைரேகை மூலம் அந்த நபரை கைது செய்த போலீசார் அவர் கொடுத்த தகவலின்பேரில் மேலும் 2 பேரை கைது செய்து இருந்தனர்.

527 வழக்குகளுக்கு தீர்வு

இதுபோல சமீபத்தில் ஆர்.டி.நகர் போலீசார் திருட்டு வழக்கில் ஒரு தம்பதியை கைரேகை மூலம் கைது செய்து இருந்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, பெங்களூருவில் பதிவாகும் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுவர்களை பெரும்பாலும் கைரேகை மூலமே கைது செய்து வருகிறோம். 

கடந்த ஆண்டில் மட்டும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் தொடர்பான பதிவான 207 வழக்குகளை கைரேகை மூலம் தீர்த்து உள்ளோம். கடந்த 2019-ம் ஆண்டில் 113 குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களை கைரேகைகள் மூலம் கைது செய்து இருந்தோம் என்றார்.

கைரேகைகள் மூலம் குற்றவழக்குகளுக்கு துப்பு துலக்குவதில் கர்நாடகம் 2-வது இடத்தில் உள்ளதாக தேசிய குற்றப்பிரிவு ஆணையம் கூறியுள்ளது. 2020-ம் ஆண்டில் மட்டும் கர்நாடகத்தில் கைரேகைகள் மூலம் 527 குற்றவழக்குகளுக்கு துப்பு கிடைத்து உள்ளது. இதில் முதல் இடத்தில் உள்ள கேரளாவில் 657 வழக்குகளில் கைரேகைகள் மூலம் துப்பு கிடைத்து உள்ளது.

Next Story