தலித் பெண்ணை தகாத வார்த்தையால் திட்டிய ரேஷன் கடை உரிமையாளர்
குடிபண்டே தாலுகாவில், ரேஷன்கடையில் அரிசி வாங்க சென்ற தலித் பெண்ணை தகாத வார்த்தைகளால் ரேஷன்கடை உரிமையாளர் திட்டினார். இதுதொடர்பாக மந்திரி சுதாகர் நேரில் விசாரணை நடத்தினார்.
சிக்பள்ளாப்பூர்: குடிபண்டே தாலுகாவில், ரேஷன்கடையில் அரிசி வாங்க சென்ற தலித் பெண்ணை தகாத வார்த்தைகளால் ரேஷன்கடை உரிமையாளர் திட்டினார். இதுதொடர்பாக மந்திரி சுதாகர் நேரில் விசாரணை நடத்தினார்.
அரிசி வாங்க...
சிக்பள்ளாப்பூர் மாவட்டம், குடிபண்டே தாலுகாவில் காட்டேனஹள்ளி கிராமம் உள்ளது. அங்கு நாராயணம்மா என்ற தலித் பெண் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று அரிசி வாங்கினார்.
அவர் வாங்கிய அரிசியில் ராகி கலந்திருந்ததால் வேறு அரிசி கொடுக்க ரேஷன்கடை உரிமையாளர் பத்மாவதம்மாவிடம் அவர் கேட்டுள்ளார்.
அதனால் கோபம் அடைந்த பத்மாவதம்மா, தலித் பெண் நாராயணம்மாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதை நாராயணம்மாவின் மகன் அவரது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அது வைரலானது.
மந்திரி ஆறுதல்
ரேஷன் கடையில் நாராயணம்மாவை ஜாதி ரீதியாக திட்டப்பட்ட சம்பவம் மந்திரி சுதாகர் கவனத்திற்கு வந்தது. உடனே, அவர், மாவட்ட கலெக்டர் லதா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார், வட்ட வழங்கல் அதிகாரிகளுடன் காட்டேனஹள்ளி கிராமத்திற்கு சென்று நாராயணம்மாவிடம் விசாரணை நடத்தி ஆறுதல் கூறினார்.
பின்னர் மாவட்ட உணவு மற்றும் பொது வினியோகத்துறை இணை இயக்குனரிடம் சம்பந்தப்பட்ட ரேஷன்கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
உரிமம் ரத்து
அதிகாரிகள் விசாரணையில் பொருட்களை எடை குறைவாக வினியோகிப்பது, பொதுமக்களை மிரட்டுவது, பையோமெட்ரிக் கருவியில் ரேகை பதிய தலா ரூ.10 வசூலிப்பது போன்ற முறைகேடுகள் அரங்கேறுவது அறியப்பட்டது.
அதனால், மாவட்ட உணவு மற்றும் பொது வினியோகத் துறை துணை இயக்குனர் ரேஷன் கடை உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் குடிபண்டே போலீசார் ரேஷன் கடை உரிமையாளர் பத்மாவதம்மா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story