சென்னை விமான நிலையத்தில் 19 மாதங்களுக்கு பிறகு 224 விமான சேவை - பயணிகள் எண்ணிக்கையும் உயர்வு
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 19 மாதங்களுக்கு பிறகு நேற்று 224 விமான சேவை இயக்கப்பட்டது. பயணிகள் எண்ணிக்கையும் உயர்ந்து 27 ஆயிரம் பேர் பயணம் செய்தனர்.
ஆலந்தூர்,
இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை குறைந்து வருகிறது. இதையடுத்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள உள்நாட்டு விமான நிலையங்களில் 100 சதவீத பயணிகள் விமானங்களை இயக்க அனுமதி அளித்துள்ளது.
இதனால் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திலும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் கடந்த 19 மாதங்களுக்கு பிறகு நேற்று 113 புறப்பாடு விமானங்களும், 111 வருகை விமானங்களும் என 224 விமான சேவை இயக்கப்பட்டன. அதில் டெல்லிக்கு 15 புறப்பாடு விமானங்களும், 15 வருகை விமானங்களும், மும்பைக்கு புறப்பாடு, வருகை என 30 விமானங்களும், பெங்களூருக்கு 22 புறப்பாடு, வருகை விமானங்களும் அதிகரிக்கப்பட்டு உள்ளன.
அதேபோல் பயணிகள் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்து, இதுவரை இல்லாத வகையில் சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானங்களிலும், சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு புறப்பட்டு செல்லும் விமானங்களிலும் என 27,000 போ் பயணம் செய்து உள்ளனா்.
கொரோனா தொற்றுக்கு பிறகு கடந்த 19 மாதங்களில் இதுவே அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக டெல்லி, மும்பை, கொல்கத்தா, கவுகாத்தி, பெங்களூரு, கோவை விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரித்து 200 புறப்பாடு விமானங்களும், 200 வருகை விமானங்களும் என 400 விமான சேவைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story