திருச்சி விமான நிலைய கழிவறையில் கிடந்த ரூ.45 லட்சம் தங்கம்


திருச்சி விமான நிலைய கழிவறையில் கிடந்த   ரூ.45 லட்சம் தங்கம்
x
தினத்தந்தி 19 Oct 2021 7:19 PM IST (Updated: 19 Oct 2021 7:19 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலைய கழிவறையில் கிடந்த ரூ.45 லட்சம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இந்த தங்கம் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செம்பட்டு,அக்.20-
திருச்சி விமான நிலைய கழிவறையில் கிடந்த ரூ.45 லட்சம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இந்த தங்கம் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறப்பு மீட்பு விமானங்கள்
கொரோனா பரவலை தடுப்பதற்காக உலகம் முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதில் விமான போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டது. இதன்காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்தியா சார்பில் சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் வெளிநாடுகளில் இருந்தும் திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கழிவறையில் தங்கம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதற்கிடையில் திருச்சி விமான நிலைய கழிவறையில் கருப்புநிற கவர் கிடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து கழிவறைக்குள் சென்று சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த கவரை கைப்பற்றினர். பின்னர் அதனை பிரித்து பார்த்ததில், அதில் 900 கிராம் தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.45 லட்சம் ஆகும்.
துபாயில் இருந்து விமானத்தில் வந்த யாரோ ஒரு பயணி தங்கத்தை கடத்தி வந்து இருக்கலாம். அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து, அதனை கழிவறையில் போட்டு விட்டு சென்று இருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறிக்கை வெளியிட கோரிக்கை
 மேலும் சென்னை, மதுரை, திருவனந்தபுரம் போன்ற விமான நிலையங்களில் பறிமுதல் செய்யப்படும் தங்கம் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்படும் தங்கம் குறித்து அறிக்கைகள் வெளியிடப்படுவது இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே பறிமுதல் செய்யப்படும் தங்கம் குறித்து அறிக்கையை சுங்கத்துறையினர் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story