கூடலூருக்கு மாற்றப்பட்ட பெண் டாக்டருக்கு கடும் எதிர்ப்பு
உடுமலையில் கர்ப்பிணியை அலைக்கழித்ததால் கூடலூருக்கு மாற்றப்பட்ட பெண் டாக்டருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வேறு இடத்துக்கு மாற்றக்கோரி சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் மனு அனுப்பி உள்ளனர்.
கூடலூர்
உடுமலையில் கர்ப்பிணியை அலைக்கழித்ததால் கூடலூருக்கு மாற்றப்பட்ட பெண் டாக்டருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வேறு இடத்துக்கு மாற்றக்கோரி சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் மனு அனுப்பி உள்ளனர்.
கர்ப்பிணி அலைக்கழிப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கர்ப்பிணி ஒருவர் சிகிச்சைக்காக வந்தார். ஆனால் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் டாக்டர் ஜோதிமணி(வயது 45) என்பவர் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. மேலும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்ததோடு, அங்கு வந்து அந்த சிகிச்சையை அவரே செய்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறைக்கு புகார் வந்தது. இதனால் அந்த அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஜோதிமணி, கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு கூடலூர் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் அதை ரத்து செய்யக்கோரியும், வேறு எங்காவது அவரை பணியிட மாற்றம் செய்யக்கோரியும் சுகாதாரத்துறைக்கு மனுக்களும் அனுப்பப்பட்டு வருகிறது.
வாபஸ் பெற வேண்டும்
இதுகுறித்து கூடலூர் பகுதி மக்கள் கூறியதாவது:-
எங்களுக்கு இன்று வரை போதிய மருத்துவ சிகிச்சை எட்டாக்கனியாகவே உள்ளது. இதனால் அண்டை மாநிலமான கேரளாவுக்கு செல்லும் நிலை காணப்படுகிறது.
கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதில் மக்களுக்கு சிறந்த சேவையாற்ற கூடிய வகையில் பணியாற்றும் டாக்டர்களை நியமிக்க வேண்டும். ஆனால் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்காமல் அலைக்கழித்த பெண் டாக்டரை கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பணியிட மாற்றம் செய்து உள்ளனர். இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். அவரை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story