2 பசுமாடுகளை கொன்று சிறுத்தைப்புலி அட்டகாசம்


2 பசுமாடுகளை கொன்று சிறுத்தைப்புலி அட்டகாசம்
x
தினத்தந்தி 19 Oct 2021 7:32 PM IST (Updated: 19 Oct 2021 7:32 PM IST)
t-max-icont-min-icon

சேரம்பாடியில் 2 பசுமாடுகளை கொன்று சிறுத்தைப்புலி அட்டகாசம் செய்தது. அதனை கூண்டு வைத்து பிடிக்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பந்தலூர்

சேரம்பாடியில் 2 பசுமாடுகளை கொன்று சிறுத்தைப்புலி அட்டகாசம் செய்தது. அதனை கூண்டு வைத்து பிடிக்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சிறுத்தைப்புலி

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட(ரேஞ்சு-3) பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி சிறுத்தைப்புலி ஒன்று புகுந்து ஆடு, மாடு, கோழி, நாய் என வளர்ப்பு பிராணிகளை கடித்து கொன்று வருகிறது. மேலும் சாலையோரத்தில் உள்ள தேயிலை செடிகளுக்குள் பதுங்கி இருந்து, அந்த வழியாக வருபவர்களை தாக்க முயல்கிறது. இதனால் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இறந்து கிடந்த பசுமாடுகள்

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் அதே பகுதியை சேர்ந்த முத்துலிங்கம் என்பவர் தனக்கு சொந்தமான 2 பசுமாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் பசுமாடுகள் திரும்பி வரவில்லை.உடனே பசுமாடுகளை தேடி முத்துலிங்கம் மற்றும் அவரது உறவினர்கள் சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் 2 பசுமாடுகளும் இறந்து கிடந்தன. அவற்றை சிறுத்தைப்புலி கடித்து கொன்று, இறைச்சியை தின்று உள்ளது தெரியவந்தது.

தொழிலாளர்கள் பீதி

இதுகுறித்து சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரகர் ஆனந்தகுமார், வனவர் ஆனந்த் மற்றும் வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர்.

அப்போது இறந்த பசுமாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதி அளித்தனர். சிறுத்தைப்புலி அட்டகாசத்தால் அப்பகுதி தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர். 


Next Story