மெமு ரெயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்


மெமு ரெயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 Oct 2021 8:18 PM IST (Updated: 19 Oct 2021 8:18 PM IST)
t-max-icont-min-icon

மெமு ரெயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்

பொள்ளாச்சி

மேட்டுப்பாளையம்-கோவை இடையே இயக்கப்படும் மெமு ரெயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மெமு ரெயில்

பொள்ளாச்சி-கோவை வழித்தடத்தில் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு பிறகு பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதற்கிடையில் கொரோனாவை காரணம் காட்டி கடந்த ஆண்டு மார்ச் முதல் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு மீண்டும் ரெயில் சேவை தொடங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மின் மயமாக்கல் பணிகள் முடிந்து, பயணிகள் ரெயில்களை இயக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இன்னும் ரெயில் போக்குவரத்து தொடங்காமல் உள்ளது. இதன் காரணமாக அகலரெயில் பாதை, மின் மயமாக்கல் பணிகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்தும் எந்த பயனும் இல்லை. மேட்டுப்பாளையம்-கோவை இடையே நவீன வசதிகள் கொண்ட மெமு(புறநகர்)  ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரெயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

பொள்ளாச்சி-கோவை இடையே தற்போது மின் மயமாக்கல் பணிகள் முடிவடைந்து விட்டன. எனவே நவீன வசதிகள் கொண்ட மெமு ரெயிலை இயக்கலாம். இந்த ரெயிலுக்கு இருபுறம் என்ஜின் இருக்கும் என்பதால், என்ஜினை கழற்றி திருப்பி வர வேண்டியதில்லை. 

இதனால் நேரம் மிச்சமாகும். மேலும் அடுத்து வருகிற ரெயில் நிலையங்கள் குறித்த அறிவிப்பு டிஜிட்டல் பலகையில் தெரிவிக்கப்படும். மேலும் கண்காணிப்பு கேமராக்களும்  உள்ளன. ஒரு பெட்டியில் ஏறினால் போதும், அனைத்து பெட்டிகளும் சென்று வரலாம்.

கூடுதல் வருவாய் 

மேலும் வேகமாக செல்வதால் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு 40 நிமிடத்தில் சென்று விடலாம். பெண்களுக்கு சிறப்பு தனி பெட்டி, அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது கோவை-மேட்டுப்பாளையம் இடையே மெமு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. எனவே அந்த ரெயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இதன் மூலம் ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். மேலும் மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக இருந்த போது நிறுத்தப்பட்ட ரெயில்களையும் மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story