செம்மறி ஆடுகளை நீலநாக்கு நோய் தாக்கும் அபாயம்-ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை
செம்மறி ஆடுகளை நீலநாக்கு நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்:
மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 2 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 6 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 25 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் தெற்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 89.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 85 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 55 சதவீதமாகவும் இருக்கும்.
நீலநாக்கு நோய்
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் நீலநாக்கு நோய் செம்மறி ஆடுகளை அதிக அளவில் தாக்கும். இந்த நோய் செம்மறி ஆடு வளர்ப்போருக்கு மிகுந்த பொருளாதார இழப்பினை உண்டாக்குகிறது.
இதை தடுக்க ஆண்டுதோறும் தடுப்பூசி போட வேண்டும். தற்போது நிலவும் வானிலையால் வயது முதிர்ந்த கால்நடைகளுக்கு குளம்பு சிதைவு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
புற ஒட்டுண்ணி தொற்று
தொழுவத்தில் உள்ள ஈரமான சாணம் மற்றும் சேறு காரணமாக காலில் புண்கள் ஏற்படும். இதனால் பாக்டீரியாக்கள் அவற்றில் தங்கி வளரும். எனவே கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மேலும் ஈரமான வானிலையின் காரணமாக கால்நடைகளுக்கு நோய் மற்றும் புற ஒட்டுண்ணி தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதை தவிர்க்க தொழுவத்தில் மேடு பள்ளமாக உள்ள இடங்களில் வறண்ட மண்ணை கொண்டு சமப்படுத்த வேண்டும். இதன் மூலம் மழைநீர் மற்றும் கால்நடைகளின் சிறுநீர் தேங்குவதை தவிர்க்க முடியும். உலர்ந்த சுண்ணாம்பு தூள் மற்றும் பிளீச்சிங் பவுடர் கலவையை கொட்டகையில் தூவுவதன் மூலம் நுண்ணுயிர் தொற்றுகளை தவிர்க்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story