இறந்த பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு


இறந்த பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 19 Oct 2021 10:39 PM IST (Updated: 19 Oct 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

சிகிச்சைக்கு சென்று இறந்த பெண்ணின் உடல் உறவினர் களிடம் ஒப்படைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது.

காரைக்குடி,
சிகிச்சைக்கு சென்று இறந்த பெண்ணின் உடல் உறவினர் களிடம் ஒப்படைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது.
குடும்ப கட்டுப்பாடு 
சாக்கோட்டை போலீஸ் சரகம் புதுவயலை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 33). இவர் புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொள்ள மயக்க மருந்தினை செலுத்திய சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக காரைக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
அப்போது அங்கு திரண்ட தமிழ்செல்வியின் உறவினர்கள் மருத்துவ குழுவினரின் தவறான சிகிச்சை காரணமாகவே தமிழ்ச்செல்வி உயிரிழந்தார். எனவே அவருக்கு சிகிச்சை அளித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி, தாசில்தார் மாணிக்கவாசகம் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வரத்தை நடத்தி உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என தெரிவித்தனர்.
 ஆறுதல்
இந்தநிலையில் மாங்குடி எம்.எல். ஏ. ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அதிகாரி களிடம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக்கொண்டார். அதன் பின் கோட்டாட்சியர் பிரபாகரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் பேச்சுவார்த்தையில் எநத் தீர்வும் எட்டப்படவில்லை.
ஒப்படைப்பு
அதன் பிறகு காலையில் புதுவயல்மெட்டுக்கடை பகுதியில் தமிழ்ச்செல்வியின் உறவினர்களும் ஊர் பொது மக்களும் ஏராளமாக திரண்டு தமிழ்செல்வியின் சாவுக்கு நீதி கேட்டு போராட்டத்திற்கு ஆயத்தமாயினர். உடனே சம்பவ இடத்திற்கு மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், வருவாய்த்துறை மற்றும் போலீஸ் படையினருடன் விரைந்து வந்தார். பின்னர் அங்கு திரண்டு இருந்தவர்களை சமாதானப்படுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அங்கு திரண்டு இருந்த மக்கள், தமிச்செல்வியின் சாவுக்கு நீதி வேண்டும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்செல்வியின் குடும்பத்திற்கும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். அதற்கு உத்தரவாதம் வேண்டும்.
கோரிக்கை
புதுவயல் பகுதிக்கு தனியாக 108 ஆம்புலன்ஸ் வேண்டும் என வலியுறுத்தினர். சாக்கோட்டை யூனியன் சேர்மன் சரண்யா செந்தில்நாதன் அப்பகுதி கோரிக்கைகளை அதிகாரிகளிடம் எடுத்துரைத்து வலியுறுத்தினார். அதிகாரிகள் கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்து உரிய நடவடிக்கைள் எடுக்கப்படும். என உறுதி அளித்தனர். அதனைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்கள் சமரசம் அடைந்தனர். பின்னர் தமிழ்செல்வியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story