தங்கச்சிமடத்தில் மீன்கள் செத்து கரை ஒதுங்கின.


தங்கச்சிமடத்தில் மீன்கள் செத்து கரை ஒதுங்கின.
x
தினத்தந்தி 19 Oct 2021 11:07 PM IST (Updated: 19 Oct 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

பாம்பன் பகுதியில் 4 வது நாளாக பாசிகள் படர்ந்து பச்சை நிறமாக கடல் காட்சி அளித்தது.

ராமேசுவரம், 
பாம்பன் பகுதியில் 4- வது நாளாக பாசிகள் படர்ந்து பச்சை நிறமாக கடல் காட்சி அளித்தது. தங்கச்சிமடத்தில் மீன்கள் செத்து கரை ஒதுங்கின.
பாசிகள்
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக பூங்கோறை வகை பச்சை பாசிகள் கடலில் படர்ந்துள்ளன ஆழ்கடல் பகுதியில் படர்ந்து இருந்த இந்த பச்சை பாசி கடல் அலை மற்றும் காற்றின் வேகத்தால் பாம்பன் முதல் மண்டபம் வரையிலான கடல் பகுதி முழுவதும் படர்ந்து உள்ளதால் கடல் நீரானது பச்சை நிறமாகவே காட்சி அளித்து வருகிறது.
இந்த நிலையில் 4-வது நாளாக பாம்பன் பகுதியில் நேற்றும் கடல் நீரானது அதிக அளவிலான பாசிகள் படர்ந்து பச்சை நிறமாகவே காட்சிஅளித்தது. குறிப்பாக இதுவரை இல்லாத அளவிற்கு பாம்பன் குந்துகால் கடல் பகுதி மற்றும் தங்கச்சி மடம் வில்லூண்டி தீர்த்தம் கடல் பகுதி பாசிகள் அதிக அளவில் படர்ந்து கரையோரத்தில் உள்ள கடல் பகுதி முழுவதும் பாசிகளாகவே காட்சிஅளித்தது. 
ஆய்வு
இதனால் தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்தம் கடல் பகுதியில் கரையோரத்தில் நேற்று ஏராளமான மீன் குஞ்சுகள் செத்து கரை ஒதுங்கி கிடந்தன. கரை ஒதுங்கி கிடந்த அந்த மீன்களை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்து சென்றனர். இதேபோல் மண்டபம் மரைக்காயர் பட்டினம் புதுமடம் வரையிலான கடல் பகுதியிலும் கடல் நீரானது பச்சைப் பாசிகள் அதிக அளவில் படர்ந்து பச்சை நிறமாகவே காட்சி அளித்து வருகிறது. 
 பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் கடல்நீர் பச்சை நிறமாக காட்சி அளித்து வருவது குறித்து மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் நிறம் மாறி இருக்கும் கடல் நீர் மற்றும் செத்து கரை ஒதுங்கிய மீன்களையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

Next Story