திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது
குமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. மாவட்டம் முழுவதும் இந்த மாதத்தில் இதுவரை இயல்பை விட 116 மி.மீ. மழை அதிகம் பெய்துள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. மாவட்டம் முழுவதும் இந்த மாதத்தில் இதுவரை இயல்பை விட 116 மி.மீ. மழை அதிகம் பெய்துள்ளது.
கனமழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொட்டி தீர்த்த கனமழையால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. முக்கியமாக மேற்கு மாவட்ட பகுதிகளில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டது. மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள், வாழை, மரவள்ளிக் கிழங்கு, காய்கறி வகைகள் சேதம் அடைந்துள்ளன. இதை தொடர்ந்து சேதத்தை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாவட்டம் முழுவதும் தினமும் பெய்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்துள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்திருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2,610 கனஅடி தண்ணீர் வந்தது. இதே போல பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 1,804 கனஅடி தண்ணீரும், சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 73 கனஅடி தண்ணீரும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும், பொய்கை அணைக்கு வினாடிக்கு 15 கனஅடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு மற்றும் முக்கடல் அணைகளுக்கு வினாடிக்கு தலா 12 கனஅடி தண்ணீரும் வந்தது.
இயல்பை விட அதிகம்
அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அளவும் குறைந்துள்ளது. அந்த வகையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 1,593 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 3,360 கனஅடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 4923 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு குறைந்து குடியிருப்பு பகுதிகளில் புகுந்த தண்ணீர் படிப்படியாக வடிந்து வருகிறது.
மேலும் திற்பரப்பு அருவியிலும் வெள்ளப்பெருக்கு குறைந்து, ஆர்ப்பரித்து கொட்டியபடி இருந்தது.
குமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்தில் இயல்பாக பெய்யும் மழையை ஒப்பிடும் போது இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதுவரை கூடுதலாக 116.58 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
Related Tags :
Next Story