சத்துணவு கூடத்தில் இருந்த முட்டைகளை உடைத்த மர்ம நபர்கள்


சத்துணவு கூடத்தில் இருந்த முட்டைகளை உடைத்த மர்ம நபர்கள்
x

சத்துணவு கூடத்தில் இருந்த முட்டைகளை உடைத்த மர்ம நபர்கள்

பனமரத்துப்பட்டி, அக்.20-
பனமரத்துப்பட்டி அரசு பள்ளியில் சத்துணவு கூடத்தில் இருந்த முட்டைகளை உடைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முட்டைகள் உடைப்பு
பனமரத்துப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்காக சத்துணவு கூடமும், சத்துணவு பொருட்களை இருப்பு வைப்பதற்காக அறையும் உள்ளது. இதனிடையே நேற்று மிலாது நபியையொட்டி பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. நேற்று மாலை பொதுமக்கள் சிலர் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக பள்ளி வளாகத்திற்குள் சென்றுள்ளனர். 
அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த சத்துணவு பொருட்கள் இருப்பு வைக்கும் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட முட்டைகளை வெளியே எடுத்து வந்து பள்ளி வளாகம் முழுவதும் போட்டு உடைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அங்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
போலீசார் விசாரணை
இதையடுத்து அவர்கள் பனமரத்துப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனே பனமரத்துப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 
அப்போது சத்துணவு கூடத்தில் இருந்த முட்டைகள் மட்டும் உடைக்கப்பட்டு இருப்பதும் வேறு ஏதும் பொருட்கள் திருட்டு போகாததும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் சத்துணவு கூடத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த முட்டைகளை மட்டும் உடைத்து போட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story