சாலையை கடக்க முயன்ற போது கார், வேன் அடுத்தடுத்து மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி - டிரைவர்கள் கைது


சாலையை கடக்க முயன்ற போது கார், வேன் அடுத்தடுத்து மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி - டிரைவர்கள் கைது
x
தினத்தந்தி 20 Oct 2021 8:34 AM IST (Updated: 20 Oct 2021 8:34 AM IST)
t-max-icont-min-icon

சாலையை கடக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் மீது கார், வேன் அடுத்தடுத்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 டிரைவர்களையும் கைது செய்தனர்.

சென்னை,

விழுப்புரம் மாவட்டம் சோழியனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா (வயது 26). இவர் தமிழக டி.ஜி.பி. போலீஸ் அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில், இரவு பணிக்காக நேற்று முன்தினம் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு பிரசன்னா நடந்து சென்றுகொண்டிருந்தார்.

காமராஜர் சாலை பி.ஆர்.ஓ.போலீஸ் குடியிருப்பு எதிரே அவர் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த கார் பிரசன்னா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரசன்னா சாலையில் விழுந்தார். இதையடுத்து அதே வழியாக வேகமாக வந்த வேன் ஒன்றும் அவர் மீது ஏறி இறங்கியது.

இதனால் சம்பவ இடத்திலேயே பிரசன்னா ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பிரசன்னாவின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்து, டிரைவர்கள், வடபழனியைச் சேர்ந்த ராஜ்குமார் (41) மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த கார்த்திக் (41) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story