கொரோனாவுக்கு பிந்தைய ‘மிஸ்ஸி’ நோயால் 9 வயது சிறுமி பாதிப்பு
கொரோனாவுக்கு பிந்தைய ‘மிஸ்ஸி’ நோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி எழும்பூர் அரசு குழந்தைகள் ஆஸ்பத்திரியில் 80 நாட்கள் தீவிர ‘வென்டிலேட்டர்’ சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினார்.
சென்னை,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் கிறிஸ்டின் (வயது 37). இவரது மனைவி ஜெனிபர் (32). சென்னை ஆழ்வார்திருநகர் எஸ்.சி.பி. காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்த கிறிஸ்டின், அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு மெர்சி (9) என்ற மகள் உள்ளார். அவர் அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, திடீரென மெர்சிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, வீட்டிலேயே மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரது பெற்றோர், போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமியை அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் எழிலரசி மேற்பார்வையில், தீவிர சிகிச்சைப்பிரிவுத் துறை தலைவர் டாக்டர் பூவழகி தலைமையில் டாக்டர்கள் குழு சிறுமியை பரிசோதனை செய்தனர்.
அப்போது சிறுமிக்கு கொரோனாவுக்கு பிந்தையை விளைவான ‘மிஸ்ஸி’ நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, அனைத்து உறுப்புகளும் செயலிழந்திருந்ததை டாக்டர்கள் குழு கண்டறிந்தனர். இதையடுத்து சிறுமிக்கு உயர்தர மருந்துகள் மூலம் நுரையீரலில் சிகிச்சை அளித்தனர்.
இந்தநிலையில், சிறுமி நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார். இதுகுறித்து தீவிர சிகிச்சைப்பிரிவுத் துறை டாக்டர்கள் சீனிவாசன் மற்றும் குமாரவேல் ஆகியோர் கூறும்போது, ‘சிறுமிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று இல்லை என முடிவு வந்தது. பின்னர் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கண்காணிக்கும் பரிசோதனை செய்த போது, சிறுமி ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் விளைவாக தான் சிறுமிக்கு, ‘மிஸ்ஸி’ நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் நுரையீரல், சிறுநீரகம் மற்றும் இதயம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டது. எனவே சிறுமிக்கு ‘ஐ.வி.ஐ.ஜி.’ எனப்படும் உயர் ரக மருந்து மூலம் சிகிச்சை அளிக்க முடிவு செய்தோம். ஒரு குப்பி மருந்தின் விலை ரூ.15 ஆயிரம் ஆகும். அந்தவகையில் ரூ.3 லட்சத்துக்கு வாங்கப்பட்ட 20 குப்பிகள் மூலம் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறுமி உயிர் பிழைப்பதற்கு 40 சதவீதம் வாய்ப்புகளே இருந்தநிலையில், டாக்டர்களின் தீவிர முயற்சியால், ‘டிரக்கியோடோமி’ சிகிச்சை மூலம் தொடர்ந்து 80 நாட்களாக வென்டிலேட்டரில் வைத்து சிறுமியை கண்காணித்து சிகிச்சை அளித்தோம். தற்போது சிறுமி பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இந்த சிகிச்சைக்கு தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.50 லட்சம் வரை செலவாகும். ஆனால், இங்கு முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது,’ என்றனர்.
சிறுமியின் உயிரைக்காப்பாற்ற 3 மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை அளித்த டாக்டர்கள் குழுவினரை ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் எழிலரசி பாராட்டினார். அப்போது ஆஸ்பத்திரி மக்கள் தொடர்பு அதிகாரி கங்காதரன் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story