திருவள்ளூர் கோ-ஆப்டெக்ஸ் நிறுவன தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை - கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவள்ளூர் கோ-ஆப்டெக்ஸ் நிறுவன தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் பஜார் வீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நேற்று கோ-ஆப்டெக்ஸ் சார்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனை துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி தீபாவளி சிறப்பு முதல் விற்பனையை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புதிய துணி ரகங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசின் தலைமை கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 86 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரியமான துணி ரகங்களை இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக அனைவரும் பயன்பெறும் வகையில் விற்பனை செய்து நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர முக்கிய பங்கு வகித்து வருகிறது.
காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. கோ-ஆப்டெக்ஸ் வாடிக்கையாளர்கள் பயன் பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி விற்பனை நடந்து வருகிறது.
இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு சேலைகள், காஞ்சீபுரம், ஆரணி, திருபுவனம் போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுசேலைகள் கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு சேலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால் மிதியடிகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி 2021 பண்டிகையை முன்னிட்டு சென்னை மண்டலத்திற்கு ரூ.36 கோடி விற்பனை குறியீடும், திருவள்ளூர் விற்பனை நிலையத்திற்கு ரூ.1 கோடியே 25 லட்சம் விற்பனை குறியீடும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோ- ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் கனவு நனவு திட்டத்தின்படி வாடிக்கையாளர்களின் மாதம்தோறும் ரூ.300 முதல் 5 ஆயிரம் வரை 10 மாத தவணைகள் மட்டும் வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்பட்டு 11 மற்றும் 12-வது மாத தவணைகள் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துவதுடன் கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு ரக துணிகளை வாங்கி பயன்பெறலாம். தீபாவளி சிறப்பு தள்ளுபடி 30 சதவீத வசதியுடன் அரசு ஊழியர்களுக்கு தவணை முறை கடன் விற்பனை வசதியும் உண்டு. எனவே அனைத்து துறை ஊழியர்களும் கைத்தறி பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
மேலும் பொதுமக்கள் அனைவரும் கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தில் பெற்று அதை பயன்படுத்தி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் தணிக்கை குணசேகரன், விற்பனை நிலைய மேலாளர் துளசிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story