வரதராஜபுரம், எழிச்சூர் ஊராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரி மறியல்


வரதராஜபுரம், எழிச்சூர் ஊராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரி மறியல்
x
தினத்தந்தி 20 Oct 2021 10:32 AM IST (Updated: 20 Oct 2021 10:32 AM IST)
t-max-icont-min-icon

வரதராஜபுரம், எழிச்சூர் ஊராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரி மறியல் போராட்டம் நடந்தது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் குன்றத்தூர் ஒன்றியம் போன்ற பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. இந்த நிலையில் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி வார்டு உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று சிக்கராயபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கடந்த 12-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் வரதராஜபுரம் ஊராட்சியில் இருந்து பதிவான வாக்கு சீட்டு பெட்டிகள் வாக்குச்சாவடியில் இருந்து வேனில் ஏற்றப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வரதராஜபுரம்- தாம்பரம் சாலையில் வாகனம் நிறுத்தப்பட்டு முறைகேடு நடந்ததாக கூறி வரதராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கோதண்டராமன் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.

புகாரின்பேரில் தேர்தல் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறி நேற்று வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை வரதராஜபுரம் பகுதியில் அ.தி.மு.க. வினர் மற்றும் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போரட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கோதண்டராமன், அ.தி.மு.க‌. மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட சுந்தர்ராஜன், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட பார்த்திபன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மறியலில் ஈடுபட்டவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதே போல் வாக்குச்சாவடியில் இருந்து வாக்குப்பெட்டிகளை ஏற்றிச்செல்லும் வாகனத்தை சாலைஓரம் நிறுத்தி வேனின் கதவு திறக்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டதாகவும். வரதராஜபுரம் ஊராட்சிக்கு மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோஷமிட்டு தமிழக அரசை கண்டித்தும் தேர்தல் அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதை தொடர்ந்து 200- க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 2 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் போராட்டம் நடந்தது. அதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடத்தப்பட்டதாகவும் இதற்கு தீர்வுகாண மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் எனவும் தேர்தல் அலுவலர் நேரில் வரவேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தேர்தல் அலுவலர் சீனிவாசன் மறியல் நடைபெற்ற பகுதிக்கு வந்தார். அப்போது மறியலில ஈடுபட்டவர்கள் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் தெரிவித்து புகார் மனுவை தேர்தல் அலுவலரிடம் கொடுத்தனர். புகார் மனுவை பெற்றுக்கொண்ட அலுவலர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தெரிவிப்பதாக கூறினார்.

எழிச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட செல்வி தேவேந்திரன் தேர்தல் அதிகாரிகளிடம் அளித்த புகாரில், தான் 67 வாக்குகள் அதிகமாக பெற்ற போதிலும் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்த பிறகும் அதிகாரிகள் கண்டு கொள்ள வில்லை என்று கூறி நேற்று வண்டலூர்- வாலாஜாபாத் சாலை பகுதியில் கண்டிகை அருகே செல்வி தேவேந்திரன் மற்றும் அ.தி.மு.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு தேர்தல் அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடக்கவில்லை. எனவே எழிச்சூர் ஊராட்சிக்கு மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தேர்தல் அலுவலர் சீனிவாசனுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மறியல் நடைபெற்ற பகுதிக்கு வந்த தேர்தல் அலுவலரிடம், வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடக்கவில்லை. பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு புகார் மனு அளித்தனர். அதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story