சின்னசேலம் அருகே தூக்குப்போட்டு நர்சு தற்கொலை - பணியிடமாறுதல் கிடைக்காததால் விபரீதம்
சின்னசேலம் அருகே பணியிடமாறுதல் கிடைக்காததால் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே அம்மையகரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராணி (வயது 45). இவரது மகள் மஞ்சுளா (25). இவர், கடந்த 2 ஆண்டுகளாக அரியலூர் மாவட்டம் ஏலக்குறிச்சி கிராம நர்சாக பணிபுரிந்து வந்தார். மஞ்சுளா தினந்தோறும் வேலைக்கு தனது வீட்டில் இருந்து பஸ்சில் சென்று வந்தார். வேலைபார்க்கும் இடம் சுமார் 80 கி.மீட்டர் தொலையில் இருந்ததால், மஞ்சுளா பெரும் சிரமப்பட்டு வந்துள்ளார்.
இதனால் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் கூட அவருக்கு ஓய்வு கிடைக்கவில்லை என தெரிகிறது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடந்த 5 மாதமாக பணியிட மாறுதல் கேட்டு அவர் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக மிகவும் மனமுடைந்த நிலையில் மஞ்சுளா காணப்பட்டார். இந்த நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு மஞ்சுளா தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த தகவலின் பேரில் சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story